Saturday, September 27, 2014

On Saturday, September 27, 2014 by farook press in ,    
திருப்பூர் : "மக்காச்சோளத்துக்கு யூரியா தேவைப்படும் நேரத்தில், செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, விலை கடுமையாக உயர்த்தப்படுகிறது,' என, குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். வேளாண் துறை இணை இயக்குனர் சந்தான கிருஷ்ணன், நேர்முக உதவியாளர் அல்தாப் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க பிரதிநிதிகள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அவர்கள் பேசியதாவது:
துரைசாமி, தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் : உடுமலை உதவி வேளாண் அலுவலக வளாகத்தில், வீணாகக் கிடக்கும் நான்கு எக்டர் நிலத்தில், கிடங்கு அமைக்க வேண்டும். பி.ஏ.பி., தண்ணீர் திறப்பில், தலா 3.5 சுற்று என்ற முடிவை, ஐந்து சுற்றுகளாக மாற்றி, கூடுதல் தண்ணீர் வழங்க வேண்டும்.
பாலசுப்ரமணியம், உழவர் <உழைப்பாளர் கட்சி மாநில நிர்வாகி: அருள்புரம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு உட்பட்ட சாய ஆலைகள், கழிவுநீரை நிலத்துக்குள் இறக்குவதால், அமராவதிபாளையம், அவரப்பாளையம், வீரபாண்டி, நொச்சிபாளையம் பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்வரமூர்த்தி, தாராபுரம் பாசன சபை சங்க தலைவர்: தாராபுரம் தாலுகாவில் உள்ள நான்கு வாய்க்கால்களை, ஒப்பந்ததாரர்கள் மூலம் பராமரிப்பதற்கு பதிலாக, பாசன சங்கத்துக்கு நிதி ஒதுக்கி, அதன் மூலம் பராமரிக்க வேண்டும். நெல்லுக்கான மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. மக்காச்சோளத்துக்கு யூரியா உரம் தேவைப்படும் நேரத்தில், செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, உரம் விலை உயர்த்தப்பட்டுள்ளது; விலை பட்டியலும் வைக்கப்படுவதில்லை.
லோகநாதன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க அமைப்பாளர் : ஆவின் பால் விலை கட்டுப்படியாகாமல் உள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்கின்றனர். மாவட்டத்தில், 2.40 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் கொள்முதல், 1.60 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. மாட்டுப்
பாலுக்கு லிட்டருக்கு ஐந்து ரூபாய், எருமைப்பாலுக்கு 10 ரூபாய் உயர்த்த வேண்டும்.
பழனிசாமி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர்: திருப்பூர் தெற்கு உழவர் சந்தை அருகே, ரோட்டில் வியாபாரிகள் கடை வைக்கின்றனர்; ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. விவசாயிகள் பாதிக்காத வகையில், உழவர் சந்தையை முறைப்படுத்த வேண்டும்.
பரமசிவம், உடுமலை
விவசாயி: தோட்டக்கலைத்துறை திட்டங்கள் குறித்து, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கூடுதல் மானியம் பெற்று, விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.வெங்கடாசலம், பொங்கலூர் விவசாயி: வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டு வராத நிலையில், கடன் வசூலிப்பில் வங்கிகள் நெருக்கடி கொடுக்கின்றன. வங்கி நடவடிக்கைகளை தளர்த்த வேண்டும்.ரமேஷ்குமார், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விவசாயிகள் நிலத்தடி நீர் பாதுகாப்பு அமைப்பு
செயலாளர் : திருப்பூர் விவசாயிகள் பாதிக்கும் வகையில் ஓடைகள், கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில், சாயக்கழிவுகளை கொட்டுவதால், நிலத்தடி நீர் மாசுபடு
கிறது. இதை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொன்னுசாமி, பி.ஏ.பி., மங்கலம் பாசன சபையின் முன்னாள் தலைவர்: ஆண்டிபாளையம் மின் அலுவலகம் அருகே உள்ள கோழிப்பண்ணை, குள்ளேகவுண்டம்பாளையம், குளத்துப்புதூர் பகுதிகள், இடுவம்பாளையம் மின் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. இடையூறு ஏற்படுவதால், ஆண்டிபாளையம் அலுவலகத்துக்கே மாற்ற வேண்டும்.இவ்வாறு, விவசாயிகளின் பிரதிநிதிகள் பேசினர்.

0 comments: