Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by farook press in ,    
சென்னை தேனாம்பேட்டையில் ஓட்டலின் 10-வது மாடியில் இருந்து குதித்து கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் உள்ள சென்னிமலைபாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகன் பரமேஸ்வரன் (வயது 23). இவர் மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள பிரபல கம்பெனி ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
பரமேஸ்வரன் கடந்த மாதம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றார். விடுமுறையை முடித்துவிட்டு பெங்களூருக்கு பணி மாறுதல் கிடைத்துவிட்டதாக தன்னுடைய பெற்றோரிடம் கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.
ஆனால் அவர் பெற்றோரிடம் கூறியபடி பெங்களூருக்கு செல்லவில்லை. மாறாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்த பரமேஸ்வரன் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினார்.
அங்கு தங்கியிருந்தபடி அண்ணா சாலையில் உள்ள 10 மாடி கொண்ட நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இரவு நேரங்களில் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் அந்த ஓட்டலின் 10-வது மாடியில் உள்ள பாரில் அமர்ந்து மது அருந்தினார்.
நள்ளிரவு 12 மணி நேரம் ஆகியதால் பார் ஊழியர் ‘பார் மூடுவதற்கான நேரம் ஆகிவிட்டது’ என்று கூறியுள்ளார். அடுத்த சில நொடிகளில் வேகமாக வெளியே சென்ற பரமேஸ்வரன் மாடியிலிருந்து திடீரென கீழே குதித்தார்.

இதில் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரமேஸ்வரன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். ஓட்டல் ஊழியர்கள் உடனே தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் விரைந்து சென்ற போலீசார் பரமேஸ்வரனின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பரமேஸ்வரன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை அவர் சட்டை பையில் இருந்து போலீசார் எடுத்தனர். அதில் ‘நான் தற்கொலை செய்துகொள்வதற்கு யாரும் காரணம் இல்லை’ என்று கூறப்பட்டிருந்தது.
பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று மதியம் பரமேஸ்வரன் உடல் இறுதி சடங்கு செய்வதற்காக அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ராயப்பேட்டையில் இருந்து ஆம்புலன்சில் அவர் உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.

பரமேஸ்வரன் தற்கொலை செய்துகொள்வதற்கு பணிபுரியும் நிறுவனத்தில் வேலைப்பளு காரணமா? அல்லது காதல் விவகாரமா? என்றும் பெங்களூருக்கு பணி மாறுதல் கிடைக்காமலேயே அவர் தனது உறவினர்களிடம் பணி மாறுதல் கிடைத்ததாக கூறிவிட்டு சென்னைக்கு வர காரணம் என்ன? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: