Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
ஆம்பூரில், 10 சென்ட் நிலம் கொடுத்தால்தான் தாலி கட்டுவேன் என அடம் பிடித்த மாப்பிள்ளையை மணப்பெண் உதறி தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கதவாளம் கிராமத்தை சேர்ந்த 30 வயதுள்ள கட்டிட மேஸ்திரிக்கும், வாணியம்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரின் பெற்றோர்களும் முடிவு செய்து திருமண நிச்சயார்த்தம் நடந்தது.
அதைத்தொடர்ந்து இருவருக்கும் ஆம்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடக்க இருந்தது. அதற்காக 2 வீட்டிலும் பத்திரிகை அடித்து உறவினர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் நேற்று முன்தினம் இரவு மாப்பிள்ளை அழைப்பு நடக்க இருந்தது. இதனால் மணப்பெண் மற்றும் உறவினர்கள் திருமண மண்டபம் அருகே உள்ள கோவிலுக்கு வந்தனர்.
மாப்பிள்ளை வீட்டாரும் கோவிலுக்கு வந்தனர். ஆனால் மாப்பிள்ளை மட்டும் வரவில்லை. இதனால் உறவினர்கள் மாப்பிள்ளையை அழைத்தபோது எனக்கு வரதட்சணையாக தர உள்ள மோட்டார்சைக்கிள் வந்தால்தான் அங்கு வருவேன் என்று கூறினார். அதைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் மோட்டார்சைக்கிள் திருமண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து மாப்பிள்ளை சரவணன் கோவிலுக்கு வந்தார்.
அப்போது மாப்பிள்ளை, தனக்கு கூடுதலாக 5 பவுன் வரதட்சணை வேண்டும் என்றார். அதையும் தருவதாக பெண் வீட்டார் ஒப்புக்கொண்டனர்.
இதற்கிடையே பெண் வீட்டாரிடம் உள்ள நிலத்தில் 10 சென்ட் நிலத்தை தனது பெயரில் எழுதி வைத்தால்தான் தாலி கட்டுவேன் என்று கூறி மாப்பிள்ளை அடம் பிடிக்க ஆரம்பித்தார். இதனால் பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். மாப்பிள்ளையின் செயல்பாடுகளால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டாரின் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாப்பிள்ளை வீட்டாருக்கும், பெண் வீட்டாருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று, இரு வீட்டாரையும் சமாதானப்படுத்தினர். ஆனால் மாப்பிள்ளை தனது பெயரில் 10 சென்ட் நிலத்தை எழுத்தி வைத்தால்தான் காலையில் மணமகள் கழுத்தில் தாலி கட்டுவேன் என்று உறுதியாக கூறி விட்டார். அதனால் போலீசார், இதுகுறித்து நீங்கள் மகளிர் போலீசில் புகார் கொடுங்கள் என்று கூறி விட்டு சென்று விட்டனர்.
அந்த நேரத்தில் மாப்பிள்ளை, நீங்கள் என்ன புகார் கொடுப்பது என கூறி தனது கையில் பிளேடால் கீறி கழுத்தில் இருந்த மாலையை கழற்றி தூக்கி வீச ஆரம்பித்தார். அப்போது மணப்பெண்ணின் பெற்றோர் மாப்பிள்ளையை திட்டினர். அப்போது உனது மற்ற 3 பெண்களையும் எனக்கு திருமணம் செய்து கொடு, எனக்கு வரதட்சணை எதுவும் தேவையில்லை என்று மாப்பிள்ளை கூறினார். இது பெண் வீட்டாருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
மாப்பிள்ளையின் இந்த செயல்பாடுகளை பார்த்து கண்ணீர் வடித்த மணப்பெண்ணின் மனம் மாறியது.
திருமணத்திற்கு முன்பே இவ்வளவு பிரச்சினை செய்யும் இந்த விசித்திர மனிதரை திருமணம் செய்து கொண்டால் நமது வாழ்க்கையே பாழாகி விடும் என்று கருதினார். எனவே, எனக்கு இந்த திருமணமே வேண்டாம் என்று கூறி கதறினார்.
மணப்பெண்ணுக்கு ஆறுதல் கூறிய பெண் வீட்டார், எங்களுக்கும் இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறி தங்களது சொந்த ஊருக்கு திரும்பிச் சென்று விட்டனர்.
இதனால் நேற்று காலையில் நடக்க இருந்த திருமணம் நின்றது. திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களும், நண்பர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
இந்த சம்பவம் ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 comments: