Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
திண்டுக்கல், 

திண்டுக்கல்லில் 11–வது பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பெண் இறந்ததையடுத்து, அவருடைய 10 குழந்தைகளும் தாயை இழந்து தவிக்கிறார்கள். அவர்களை தாயில்லா குறை தெரியாமல் வளர்க்கப்போவதாக அவர்களுடைய தாத்தா கூறி உள்ளார்.

பிரசவத்தின்போது பெண் சாவு 


திண்டுக்கல் தோட்டனூத்து பகுதியை சேர்ந்தவர் சுப்பன் (வயது 66). இவர், பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 60). இவர்களுக்கு மணிகண்டன் (40) என்ற மகனும், சசிகலா என்ற மகளும் உள்ளனர்.

இதில் மணிகண்டனுக்கு சீலப்பாடியில் உள்ள உறவினர்கள் வழியில் சித்ரா (வயது 35) என்ற பெண்ணை கடந்த 1998–ம் ஆண்டு சுப்பன் திருமணம் செய்துவைத்தார். மணிகண்டனுக்கும், சித்ராவிற்கும் 10 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த நிலையில், 11–வது முறையாக கர்ப்பமான சித்ரா, பிரசவத்திற்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது பரிதாபமாக இறந்தார்.

10 குழந்தைகளை பெற்றெடுத்த சித்ராவின் இறப்பு பற்றி அவருடைய மாமனார் சுப்பன் கூறியதாவது:–

10 குழந்தைகள் 


மணிகண்டன், சித்ரா தம்பதிக்கு முதலில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு முத்தமிழ் முதல்வன் என்று பெயர் வைத்தோம். அவனுக்கு 15 வயது ஆகிறது. 10–ம் வகுப்பு அரசு தேர்வில் தோல்வியடைந்த அவன் மீண்டும் தேர்வு எழுத படித்துக்கொண்டு இருக்கிறான். அவனுக்கு அடுத்து மகாலட்சுமி (14) திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள்.

அதற்கு அடுத்ததாக பிறந்த சத்தியாலட்சுமி (13) 9–ம் வகுப்பும், யோகேஸ்வரி (12) 7–ம் வகுப்பும், யோகேஸ்வரன் (10) 5–ம் வகுப்பும், பிரபாகரன் (9) 4–ம் வகுப்பும், கொடியரசி (7) 2–ம் வகுப்பும், சீதா (4) தோட்டனூத்தில் உள்ள பால்வாடியிலும் படித்து வருகின்றனர். சீதாவிற்கு அடுத்ததாக குபேரன் (2), மாரீஸ்வரி (வயது 1) என 10 குழந்தைகள் உள்ளனர்.

குளிர்பானம் 


இந்த நிலையில், சித்ரா 11–வது முறையாக கர்ப்பமானார். 7 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, திடீரென ஒரு நாள் சித்ராவிற்கு வயிற்று வலி வந்தது. கடையில் குளிர்பானம் வாங்கி கொடுங்கள் என்று கேட்டார். வாங்கி கொடுத்தேன். குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் வலி நின்று விட்டது என்றார். அதற்கு பின்பு 2 முறை வயிற்று வலி வந்து இருக்கிறது. அப்போதும் எனது மனைவி மூலம் கடையில் குளிர்பானம் வாங்கி குடித்து விட்டு சித்ரா சமாளித்து இருக்கிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மூச்சுவிட சிரமப்பட்ட அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தோம். ஆஸ்பத்திரியில் அவருக்கு போதிய சிகிச்சை அளித்தும் பலன் இன்றி சித்ரா பரிதாபமாக இறந்தார்.

சித்ராவின் வயிற்றில் இருந்த குழந்தை 2 நாட்களுக்கு முன்பே இறந்து விட்டது. ஆனால் உரிய நேரத்திற்கு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுத்து கொள்ளாத காரணத்தால் உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது.

குழந்தைகள் தவிப்பு 


அவரை இழந்து 10 குழந்தைகளும் தவிக்கிறார்கள்.

சித்ரா தனது குழந்தைகளை அளவு கடந்த பாசத்துடன் வளர்த்தார். அதைப்போலவே நானும் அவரது குழந்தைகளை வளர்க்க ஆசைப்படுகிறேன். விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்கும் எண்ணம் இல்லை. நான் அரசு வேலை பார்த்து ஓய்வூதியம் பெற்று வருகிறேன். இப்போது வங்கி ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக வேலை பார்க்கிறேன். எனது மகன் கூலி வேலைதான் செய்து வருகிறார். அவர் சம்பாதித்து கொடுக்கும் பணத்தை கொண்டும், எனது வருமானத்தை வைத்தும் 10 குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: