Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
தஞ்சையில் 12 தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக சத்தம் எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான்களை போக்குவரத்துப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

போக்குவரத்துப்பிரிவு போலீசார் சோதனை

பஸ்களில் அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான்(ஏர்ஹாரன்) பொருத்தக்கூடாது என்று சட்டவிதி உள்ளது. ஆனால் இதை பற்றி எல்லாம் யாரும் கவலைப்படாமல் பெரும்பாலான பஸ்களில் அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான் தான் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், குறுகலான சாலைகளிலும் தனியார் பஸ்கள் அதிக ஒலியை எழுப்பி கொண்டு செல்கின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர், சாலையோரம் நடந்து செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் இருந்து பயத்தில் கீழே விழுந்துவிடும் சம்பவங்களும் நடக்கின்றன.

இதனால் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பானை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் தஞ்சை நகர போக்குவரத்துப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் கீழவாசல் வெள்ளைபிள்ளையார் கோவில் பகுதியிலும், தஞ்சை பழைய பஸ் நிலையம், தொம்மங்குடிசை ஆகிய பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் பஸ்களை வழிமறித்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக மக்களை அச்சுறுத்தும் வகையில் 12 தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை போக்குவரத்துப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

சட்டப்படி நடவடிக்கை

மேலும் இது போன்ற அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது என்று பஸ் டிரைவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இது குறித்து போக்குவரத்துப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தம் கூறும்போது, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தும் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான்களை பொருத்தி வாகனங்களை இயக்கினால் அந்த வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினார்.

0 comments: