Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் கும்பகோணம் பாதுகாப்பு மையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட்ட சிலைகள்
அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தாள் பிரகதீஸ்வரர் கோவிலில் திருடப்பட்ட நடராஜர் சிலையும், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோவிலில் திருடப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் சிலையும், சிலைக்கடத்தல் மன்னன் கபூர் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டது. அவை அங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அங்குள்ள சிலைகளை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் மூலம் தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த அந்நாட்டு பிரதமர் டோனிஅபோட், அந்த சிலைகளையும் தனி விமானம் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வந்திருந்தார். பின்னர் அந்த சிலைகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிலைகள் மீட்பு
இந்நிலையில் அந்த சிலைகளை சென்னை கொண்டுவர தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி அந்த சிலைகள் கடந்த 11–ந்தேதி விமானம் மூலம் டெல்லியிலிருந்து சென்னை கொண்டுவரப்பட்டது. பின்னர் அந்த சிலைகளை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நேற்று அர்த்த நாரீஸ்வரர் சிலையை விருத்தாசலம் கோர்ட்டிலும், நடராஜர் சிலையை ஜெயங்கொண்டம் கோர்ட்டிலும் ஒப்படைத்தனர்.
பாதுகாப்பு மையத்தில் சேர்ப்பு
பின்னர் 2 சிலைகளும் கோர்ட்டு உத்தரவின்படி, கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் உள்ள உலோக திருமேனி சிலைகள் பாதுகாப்பு மையத்திற்கு நேற்று இரவு சிலைகடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்நடராஜன் தலைமையில் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. சிலைகளை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் மாரியப்பன் பெற்றுக்கொண்டார். உலோக திருமேனி சிலைகள் பாதுகாப்பு மையங்கள் தமிழ்நாட்டில் திருவாரூர் மற்றும் கும்பகோணத்தில் செயல்பட்டு வருகிறது. ஜெயங்கொண்டம், விருத்தாசலம் அருகேயுள்ள பாதுகாப்பு மையமாக கும்பகோணம் உள்ளதால் இங்கு இச்சிலைகள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments: