Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
தண்ணீர் தொட்டியில் மூழ்கி, 1½ வயது குழந்தை பலியான சம்பவம் திண்டுக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீரில் மூழ்கி பலி

திண்டுக்கல் அய்யன்குளம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 43). இவர், திண்டுக்கல்லில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி செல்வி (38). இவர்களுக்கு பிரியங்கா (7), தானியா (4), சிவராமன் (1½) என்ற 3 குழந்தைகள் உள்ளனர். இதில், குழந்தை சிவராமன் நேற்று மாலை தனது வீட்டருகே விளையாடி கொண்டிருந்தான்.

வீட்டின் முன்பு தரையில் சுமார் 9 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டி உள்ளது. அந்த தொட்டியில் இருந்து மாடிக்கு தண்ணீர் ஏற்றினர். இதனால் தண்ணீர் தொட்டியின் ஒரு பகுதி திறந்திருந்தது. இதை அறியாத சிவராமன், தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டான். சிறிது நேரத்தில், தண்ணீரில் மூழ்கி அவன் பரிதாபமாக இறந்தான்.

கதறி அழுத உறவினர்கள்

இதற்கிடையே விளையாடி கொண்டிருந்த குழந்தையை காணாததை கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அக்கம்பக்கத்தில் தேடினர். அப்போது தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை பிணமாக கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுவனின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

சில நாட்களாக அந்த தண்ணீர் தொட்டியில் 2 அடி தான் தண்ணீர் இருந்திருக்கிறது. இதனால் நேற்று முன்தினம் தான் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து தொட்டியை நிரப்பி இருக்கின்றனர். அந்த தண்ணீர் தான், சிறுவனின் உயிரை குடித்திருக்கிறது. இதேபோல் திண்டுக்கல்லில் வேறு இடத்தில் வசித்து வந்த ஆறுமுகம், கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் தனது குடும்பத்தினருடன் அந்த வீட்டுக்கு வாடகைக்கு குடிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை மூழ்கி பலியான சம்பவம் திண்டுக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: