Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
நியூயார்க்: ""21ம் நூற்றாண்டு இந்தியாவுடையது'' என நியூயார்க் நகரில் உள்ள மேடிசன் ஸ்கொயரில் பிரதமர் மோடி பேசினார்.அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள மோடி, அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியை மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற, இந்திய வம்சாவளி பெண்ணான நீனா தவ்லூரி தொகுத்து வழங்கினார். இந்த பங்கேற்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. எல்.சுப்ரமணியம் வயலின் இசைக்க அவரது மனைவி கவிதா கிருஷ்ணமூர்த்தி பாடினார். குச்சிப்புடி உள்ளிட்ட இந்திய பாரம்பரிய நடனங்கள் இடம்பெற்றன. கலைநிகழ்ச்சிகளின் நடுவே மோடியின் உருவத்தை ஒருவர் தத்ரூபமாக வரைந்தார். நிகழ்ச்சியில் அமெரிக்க எம்.பி.,க்கள் பலர் முதலில் மேடைக்கு வந்தனர். பின் மோடி கூட்டத்திலிருந்து வந்து மேடையேறினார். அமெரிக்க, இந்திய தேசிய கீதங்கள் பாடப்பட்டன. 
பின் மோடி அமெரிக்க சகோதர, சகோதரிகளே என பேச்சை துவங்கினார். (அப்போது கை தட்டலில் அரங்கமே அதிர்ந்தது). அவர் இந்தியில் பேசியதாவது: "இந்த பெரிய விழாவை ஏற்பாடு செய்த அமெரிக்க வாழ் இந்திய மக்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நவராத்திரி விழா வாழ்த்துக்கள். தகவல் தொழில்நுட்பத்தால் உலகம் சுருங்கிவிட்டது. பாம்பாட்டிகளின் நாடு என்று கூறப்பட்ட நமது நாடு, ஒரு "மவுஸ் கிளிக்'கில் உலகையே நகர்த்தி கொண்டு செல்கிறது. அமெரிக்க வாழ் இந்தியர்களாகிய உங்களது நடவடிக்கை, கலாச்சாரம் மற்றும் திறமைகளால் அமெரிக்காவில் கவுரவத்தை சம்பாதித்துள்ளீர்கள். இந்தியாவின் கவுரவத்தை உயர்த்தியுள்ளீர்கள். அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இந்தியர் என்பதில் பெருமை கொள்ள வேண்டும். இங்குள்ளவர்கள் எனக்காக ஓட்டளிக்கவில்லையெனினும், வெற்றி பெற்ற போது கொண்டாடினர். தேர்தலில் வெற்றி பெறுவது என்பது எந்த ஒரு பதவிக்கோ அல்லது நாற்காலிக்கோ அல்ல. நான் பிரதமராக பதவியேற்றதில் இருந்து இதுவரை 15 நிமிடம் கூட ஓய்வெடுக்கவில்லை. 21ம் நூற்றாண்டு ஆசியாவின் வளர்ச்சியை நம்பியே உள்ளது. ஆசியாவின் வளர்ச்சி இந்தியாவை நம்பி உள்ளது. இந்தியா பழமையான கலாசாரத்தை கொண்ட இளமையான நாடு. இந்திய மக்கள்தொகையில் 65 சதவீதத்தினர் 35 வயதுக்கு கீழ் உள்ளனர். இந்த இளைஞர் சக்தி வேறு எந்த நாட்டுக்கும் இல்லை. உலகில் இந்தியர்கள் இல்லாத நாடே இல்லை. இந்த இளைய இந்தியா உலகத்துக்கு சேவையாற்ற தயாராக இருக்கிறது. ஜனநாயகம் இந்தியாவின் பெரிய பலம். அந்த ஜனநாயகத்தில் சிறந்த நிர்வாகம் இருந்தால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அனைவருக்காகவும் நாட்டை கட்டமைக்க வேண்டும். எந்த நிலையிலும் இந்தியாவை விட்டு கொடுக்கக் கூடாது. 
ஆட்டோ செலவை விட குறைவு:ஆமதாபாத்தில் ஆட்டோவில் ஒரு கி.மீ., பயணம் செய்ய 10 ரூபாய் செலவாகிறது. ஆனால் ஒரு கி.மீட்டருக்கு 7 ரூபாய் மட்டுமே செலவு செய்து செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோள் அனுப்பி உள்ளோம். ஒரு ஹாலிவுட் படம் தயாரிக்கும் செலவை விட, குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்திற்கு சென்றுள்ளோம். மேக் இன் இந்தியா திட்டத்தில் பங்கேற்க உங்களை அழைக்கிறேன். நீங்கள் மனித வளத்தை விரும்பினால், குறைந்த கட்டணத்தில் பொருட்களை தயாரிக்க விரும்பினால், இந்தியா தான் உங்களுக்கு உகந்த நாடு. மகாத்மா காந்தி, சுகாதாரத்தில் ஒரு போதும் சமரசம் செய்து கொண்டதில்லை. அவர் நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்துள்ளார். அவருக்கு நாம் சுத்தமான இந்தியாவை பரிசாக அளிப்போம். வெளிநாடுவாழ் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும். அவர்களுக்கான வேலையை இந்தியாவிலேயே உருவாக்க வேண்டும். 2022ம் ஆண்டுக்குள் நாட்டுக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரசு மக்களுக்காக மட்டுமே செயல்படும். நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த வேண்டும். மகாத்மா காந்தியும் தென்ஆப்ரிக்காவில் ஒரு வெளிநாடு வாழ் இந்தியராக இருந்தவர் தான். அதன்பின் நாடு திரும்பி சுதந்திரம் பெற்று தந்தார்.'' இவ்வாறு மோடி பேசினார். 

0 comments: