Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளில் தட்டு ரிக்ஷாக்களில் மோட்டார்கள் பொருத்தி அதிவேகமாக இயக்கி வருவதாகவும், இதனால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதாகவும் போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவுக்கு புகார்கள் வந்தது. தட்டு ரிக்ஷாக்களில் மோட்டார் பொருத்தி இயக்கக்கூடாது என்று உத்தரவு அமலில் இருந்தபோதும், இதுபோன்ற வாகனங்கள் அதிகமாக இயக்கப்பட்டு வந்ததால், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநகர போலீசாருக்கு கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை தொடர்ந்து திருச்சி மாநகரில் காந்திமார்க்கெட், கண்டோன்மெண்ட், கோட்டை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது விதிமுறை மீறி மோட்டார்களுடன் இயக்கப்பட்ட தட்டு ரிக்ஷாக்களை மடக்கி பிடித்து காந்திமார்க்கெட் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
அங்கு தட்டு ரிக்ஷாக்களில் பொருத்தி இருந்த மோட்டார்கள் அகற்றப்பட்டன. நேற்று ஒரேநாளில் காந்திமார்க்கெட்டில் 22, கண்டோன்மெண்ட்டில் 3, கோட்டையில் 2 ஆகியவை சேர்த்து மொத்தம் 27 தட்டுரிக்ஷாக்களில் மோட்டார்கள் அகற்றப்பட்டன. மாநகர பகுதிகளில் இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.

0 comments: