Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
திருச்சி மாநகர காவல்துறையில் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்றாற்போல், ‘வாட்ஸ்அப், ‘பேஸ்புக்‘ மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் கூறினார்.

இது குறித்து அவர் திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நவீன தொழில்நுட்பம்

திருச்சி மாநகர காவல்துறையில் தற்போது புதிதாக ‘வாட்ஸ்அப்’ மூலம் புகார் தெரிவிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்தநேரமும் வாட்ஸ்அப்பில் தகவல்களை கொடுக்கலாம். தகவல் கொடுப்பவர்களின் விபரம் ரகசியமாக வைக்கப்படும். தற்போது இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாற்றம் அதிகமாக உள்ளது. காவல்துறையிலும் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இது உருவாக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் 9626273399 என்ற எண்ணுக்கு ஈவ்டீசிங், போக்குவரத்து நெரிசல், விபத்து, குற்ற சம்பவங்கள் குறித்து தகவல்களை அனுப்பலாம்.

இதனை சுழற்சி முறையில் எந்நேரமும் காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பார்கள். இது தவிர மாநகர போலீசில் பேஸ்புக் மூலமும் தகவல்களை தெரிவிக்க முடியும். சென்னையில் உள்ள காவல்துறை தலைமையகம் அறிவுறுத்தலின்படி, திருச்சி மாநகரில் செயல்பட்டு வரும் குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் போலீஸ்நிலையங்கள் உள்பட மொத்தம் 24 போலீஸ் நிலையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் தலா 3 கேமரா வீதம் 72 கேமராக்கள் பொருத்தப்பட்டு, அந்தந்த போலீஸ் நிலையங்களில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் கண்காணிக்கப்படும்.

ஓட்டுனர் உரிமம் ரத்து

கடந்த 2013-ம் ஆண்டு 44 கொள்ளை வழக்குகள் பதிவானது. இந்த ஆண்டு 25 கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த ஆண்டில் 20 கொலை வழக்குகள் பதிவானது. இந்த ஆண்டு 13 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 12 கொலை வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆதாய கொலை ஒன்று மட்டும் இந்த ஆண்டில் நிகழ்ந்துள்ளது. ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.1 கோடியே 59 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி மாநகரில் கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துக்களில் 127 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு 110 பேர் இறந்துள்ளனர். கட்டுப்பாடு இல்லாமல் வாகனம் ஓட்டியது, விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட 52 வழக்குகளில் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 64 பேருடைய உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை பிடித்து விசாரித்து வருகிறோம். ஆனால் இவர்கள் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் என்பதால், அவர்களின் எதிர்கால நலன் கருதி, பெற்றோரை அழைத்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, துணை கமிஷனர்கள் அபினவ்குமார், ஜெயந்தி, கூடுதல் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


0 comments: