Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
கோவை அருகே வீடு புகுந்து முதியவர்களை தாக்கி நகைகளை கொள்ளை கும்பல் பறித்து சென்றது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீஸ் டி.ஐ.ஜி.யும், போலீஸ் சூப்பிரண்டும் நேரில் விசாரணை நடத்தினர்.

வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள்

கோவை சரவணம்பட்டியை அடுத்த கொண்டையம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 40). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். விஜயகுமாருடன் அவரது தந்தை மீனாட்சிசுந்தரம் (67), தாய் சியாமளா (61), மனைவி முத்துமாரி ஆகியோர் வசித்து வருகிறார்கள்.

விஜயகுமார் நேற்று இரவு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் முத்துமாரி, மீனாட்சி சுந்தரம், சியாமளா ஆகியோர் இருந்தனர். இரவு சாப்பிட்டு விட்டு அவர்கள் தங்கள் அறைகளுக்கு சென்று தூங்கி கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் விஜயகுமாரின் வீட்டிற்கு வந்த 2 மர்ம நபர்கள் வீட்டு பிரதான கதவில் ஓட்டி இருந்த நிலைக்கண்ணாடியை கழற்றினார்கள். அதன் பிறகு கண்ணாடி இருந்த இடத்தின் வழியே கையை உள்ளே நுழைத்து உட்புறமாக பூட்டி இருந்த கதவை திறந்து உள்ளனர். மர்ம நபரில் ஒருவன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு ஆட்கள் யாராவது வருகிறார்களா? என்று நோட்டமிட்டான்.

முதியவர்கள் மீது சரமாரி தாக்குதல்

கதவு திறக்கப்பட்ட சத்தத்தை கேட்டு மீனாட்சி சுந்தரம் யாரது? என்று சத்தம் போட்டு கொண்டே தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது வீட்டிற்குள் நின்றிருந்த மர்ம நபர், மீனாட்சி சுந்தரத்தின் தலையில் பலமாக தாக்கினார். இதில் அம்மா என்று அலறியபடி அவர் கீழே விழுந்தார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த சியாமளாவையும் அந்த மர்ம நபர் தலையில் பலமாக தாக்கினார். அவரும் அலறியபடியே கீழே விழுந்தார்.

மாமனார், மாமியாரின் அலறல் சத்தத்தை கேட்டு பக்கத்து அறையில் இருந்து முத்துமாரி சத்தம் போட்டுக்கொண்டே வெளியே ஓடி வந்தார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களும் திடீரென்று தங்களது வீட்டில் விளக்கை எரியவிட்டு கதவை திறந்தனர். இதை பார்த்த வெளியே நின்றிருந்த ஆசாமி வீட்டிற்குள் இருக்கும் கொள்ளையனுக்கு சைகை காண்பித்தான். உடனே வீட்டிற்குள் நின்றிருந்த அந்த ஆசாமி, சியாமளா அணிந்து இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். வெளியே நின்றிருந்த ஆசாமியும் தப்பி ஓடி விட்டான்.

தீவிர சிகிச்சை

இந்த நிலையில் கொள்ளையர்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து மீனாட்சிசுந்தரமும், சியாமளாவும் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். உடனே முத்துமாரி 108 ஆம்புலன்சுக்கும், தனது கணவருக்கும் தகவலை தெரிவித்தார். இதற்கிடையே பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் ஓடி வந்து காயம் அடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மற்றொரு வீட்டில் திருட்டு

இதே போல் விஜயகுமாரின் வீட்டில் இருந்து 1½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தனசேகரன் (33) என்பவரது வீட்டிலும் அந்த கொள்ளை கும்பல் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறது. நேற்று தனசேகரன் தனது மனைவி மதுமதி மற்றும் குழந்தையுடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். வீட்டின் கதவிலிருந்த கண்ணாடியை கழற்றி உட்புறமாக பூட்டி இருந்த கதவை திறந்து உள்ளே புகுந்த ஆசாமி குழந்தை இடுப்பில் கட்டி இருந்த வெள்ளி அரைஞாண் கொடியை அறுத்தான். சத்தம் கேட்டு எழுந்த மதுமதி தனது கணவரை எழுப்ப முயன்று இருக்கிறார். அப்போது கொள்ளையன் மதுமதியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி விட்டு வெள்ளி அரைஞாண் கொடியையும், வீட்டில் இருந்த கவரிங் நகையையும் பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டான்.

போலீஸ் டி.ஐ.ஜி. நேரில் விசாரணை

இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீஸ் டி.ஐ.ஜி. மணீஸ் திவாரி, போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்கள். மேலும் மோப்ப நாய் ஹேரி வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து கொள்ளையர்களின் கைரேகை பதிவாகி இருக்கிறதா? என்று ஆய்வு நடத்தினர்.

0 comments: