Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள அய்யா வைகுண்ட சிவபதியில் புரட்டாசி திருவிழா நாளை(19-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அய்யா வைகுண்ட சிவபதி

கோவை சரவணம்பட்டியை அடுத்த வரதய்யங்கார்பாளையம் லட்சுமி கார்டனில் அய்யா வைகுண்ட சிவபதி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு பணிவிடை, அன்னதானம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருவிழா நடைபெறுகிறது.

அது போல் இந்த ஆண்டுக்கான புரட்டாசி திருவிழா நாளை(19-ந்தேதி) தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு பதி நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு நாதஸ்வர வாத்தியம், செண்டை வாத்தியம் முழங்க கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 5.30 மணிக்கு உகபடிப்பு, அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளல், காலை 8 மணிக்கு அன்னதானம், மதியம் 12 மணிக்கு உச்சிபடிப்பு பணிவிடை, அன்னதானமும், இரவு 7.30 மணிக்கு அகில திரட்டு சிறப்பு சொற்பொழிவும், தொட்டில் வாகனத்தில் அய்யா திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

திருவீதி உலா

திருவிழாவையொட்டி 20-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தினமும் காலை, மாலை உகபடிப்பும், மதியம் உச்சிப்படிப்பும், அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. தினமும் 6 மணிக்கு சொற்பொழிவும், இரவு 8.30 மணிக்கு வெவ்வேறு வாகனங்களில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.

20-ந்தேதி மயில் வாகனத்திலும், 21-ந்தேதி அன்ன வாகனத்திலும், 22-ந்தேதி தொட்டில் வாகனத்திலும், 23-ந்தேதி பூஞ்சப்பர வாகனத்திலும், 24-ந்தேதி சர்ப்ப வாகனத்திலும், 25-ந்தேதி கருட வாகனத்திலும், 26-ந்தேதி குதிரை வாகனத்திலும், 27-ந்தேதி ஆஞ்சநேயர் வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். 27-ந்தேதி இரவு 9 மணிக்கு செந்தில்குமாரின் அய்யா நாமகீத இன்னிசை கச்சேரி நடைபெறும்.

தேரோட்டம்

திருவிழாவின் 10-ம் நாள்(28-ந்தேதி) இரவு 7.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட இந்திர வாகனத்தில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 29-ந்தேதி பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு உகபடிப்பு, பணிவிடை, அன்னதானமும், பகல் 11.30 மணிக்கு பல்லக்கு வாகனம் மூலம் அய்யா வைகுண்டர் திருத்தேருக்கு எழுந்தருளல், பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு இளைபெருமாளின் இசை நிகழ்ச்சி நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா வைகுண்டர் அம்மையப்பராக எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். அதிகாலை 3 மணிக்கு திருக்கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

0 comments: