Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
சேமநல நிதி வட்டி தொகையை வழங்கக்கோரி ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு 2-வது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தினர்.

முற்றுகை போராட்டம்

திண்டுக்கல் மாநகராட்சியில் பணிபுரிந்த ஓய்வுபெற்ற துப்புரவு பணியாளர்களுக்கு பல ஆண்டுகளாக சேமநல நிதி வட்டித்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. அதேபோல், பணியின்போது இறந்த தொழிலாளர்களுக்கும் பண பலன்கள் வழங்கப்படவில்லை.

நிலுவையில் உள்ள சேமநல நிதி வட்டி தொகையை உடனடியாக வழங்கக்கோரி ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் நேற்று முன்தினம் மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அதே கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக நேற்றும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தை

நிலுவையில் உள்ள சேமநலநிதி வட்டி தொகை மற்றும், இறந்தவர்களுக்கான பண பலன்களை உடனடியாக வழங்கக்கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாநகராட்சி ஆணையாளர் ராஜன் விரைந்துவந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர், போராட்டக்காரர்கள் ஆணையாளரின் அறை கதவை தட்டி கோஷங் கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, திண்டுக்கல் நகர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன் தலைமையிலான போலீசார் விரைந்துவந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். நேற்று காலை 11 மணியளவில் தொடங்கிய அவர்களது போராட்டம் சுமார் 4 மணி நேரம் நடந்தது.

ரூ.1 கோடியே 17 லட்சம் நிலுவை

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜனிடம் கேட்டபோது, ‘சுமார் 1,600 துப்புரவு பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சேம நல நிதி வட்டி தொகை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதற்கான முழு நிதி இன்னும் வரவில்லை. 1990-2000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் வழங்க வேண்டிய நிதி சுமார் சுமார் ரூ.1 கோடியே 17 லட்சம் வந்து உள்ளது. அந்த தொகையை அடுத்த மாதம் தொடக்கத்தில் இருந்து பல்வேறு கட்டங்களாக பிரித்து வழங்க இருக்கிறோம். 2001-ம் ஆண்டில் இருந்து கொடுக்க வேண்டிய தொகைக்கான நிதி வந்ததும், பின்னர் கொடுக்கப்படும்’ என்றார். 

0 comments: