Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by farook press in ,    
கோவை, செப்.24–
கோவையை அடுத்த நீலாம்பூரில் மஹாராஜா தொழில் நுட்ப பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 1000–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் கடந்த திங்கட்கிழமை கல்லூரி நிர்வாகம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக கூறி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து நேற்று சுமார் 500–க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் சமாதானம் பேசிய போலீசார் மாணவ பிரதிநிதிகளில் சிலரை மட்டும் கலெக்டரை சந்திக்க அனுமதிப்பதாக கூறினர். இதையடுத்து மாணவ பிரதிநிதிகள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில் கல்லூரி நிர்வாகம் அரசின் விதிமுறைகளை மீறி கல்வி கட்டணத்தை கூடுதலாக வசூலித்து வருகின்றனர். அதை தடுத்து தாங்கள் கல்லூரிக்கு கூடுதலாக செலுத்தி கட்டணங்களை திரும்ப பெற்று தர வேண்டும்.
இனிமேல் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். மனு மீது உரிய விசாரணை நடத்துவதாக கலெக்டர் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து மாணவர்கள் கல்லூரிக்கு திரும்பினர்.
கல்லூரியில் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களை கல்லூரி நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து கல்லூரியை கண்டித்து கல்லூரிக்கு வெளியே வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதியம் ஆரம்பித்த போராட்டம் இரவும் நீடித்தது. கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த முன்வராததால் இரவு கஞ்சித் தொட்டி அமைத்தனர்.
மேலும் விடிய விடிய 500–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் தரையில் அமர்ந்து கல்லூரியின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த நிலையில் இரவில் திடீரென்று கனமழை பெய்தது. மழையையும் பொருப்படுத்தாமல் மழையில் நனைந்தபடி அமர்ந்திருந்தனர். இது பார்ப்போரையும் பரிதவிக்க செய்யும் விதமாக இருந்தது.
இந்தநிலையில் நள்ளிரவு 1 மணியளவில் மழையில் தொடர்ந்து நனைந்தபடி இருந்ததால் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு மாணவி லாவண்யா மற்றும் மெக்கானிக்கல் இறுதி ஆண்டு மாணவர் மனோஜ் ஆகியோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினர். மற்ற மாணவர்கள் 108 ஆம்புலன்சு உதவியுடன் பாதிக்கப்பட்ட 2 பேரையும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் தொடர்ந்து இன்று காலையும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இதன் காரணமாக கல்லூரி முன்பு தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

0 comments: