Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by farook press in ,    
வால்பாறை, செப்.24–
கோவை மாவட்டம் பெரியகல்லாறு, சின்னக்கல்லாறு, சின்கோனா மற்றும் நீராறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக 20 யானைகள் கொண்ட கூட்டம் உலா வருகின்றன. நேற்று மாலை 3 பெரிய யானை மற்றும் 3 சிறிய யானை என 6 யானைகள் கொண்ட கூட்டம் நீராறு அணைப்பகுதியில் உள்ள வனத்தில் முகாமிட்டிருந்தன.
நள்ளிரவு 11.30 மணியளவில் காட்டு யானைகள் கூட்டம் நீராறு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன. அங்கிருந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்கின. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்தனர்.
4 மணி நேரம் நீராறு பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் அதிகாலை 2.30 மணியளவில் சின்கோனா பத்தாம்பாடி குடியிருப்பு பகுதிக்கு சென்றன. அங்கு ஆட்கள் இல்லாத வீட்டில் கதவு மற்றும் ஜன்னலை உடைத்து தும்பிக்கையை வீட்டுக்குள் நுழைத்து சாப்பிட உணவு பொருட்கள் உள்ளனவா? என தேடின.
பின்னர் அதே பகுதியில் தனியாக வசித்து வந்த விஜயகுமாரி என்ற பெண் தொழிலாளியின் வீட்டுக்கு சென்றன. விஜயகுமாரி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். காட்டு யானை கூட்டத்தில் இருந்த ஒரு யானை சமையலறை பகுதிக்கு சென்று அங்கிருந்த ஜன்னலை உடைத்து தும்பிக்கையை உள்ளே நுழைத்தது.
சமையலறையில் அரிசி, பருப்பு உள்ளதா? என தேடிய போது பாத்திரங்கள் உருண்டோடின. சத்தம் கேட்டு எழுந்த விஜயகுமாரி சமையலறையில் பார்த்த போது யானையின் தும்பிக்கையை கண்டு அதிர்ச்சியடைந்தார். யானையிடம் இருந்து தப்பிக்க வீட்டுக்கதவை திறந்து வெளியே ஓட முயன்றார். கதவை திறந்த போது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த யானைக் கூட்டத்தில் இருந்த ஒரு யானை தும்பிக்கையை வீட்டுக்குள் நுழைத்தது.
மீண்டும் அச்சத்தில் நடுநடுங்கிய விஜயகுமாரி தீப்பந்தத்தை ஏற்றி யானையை துரத்தினார். பின்னர் கதவை சாத்தி கட்டிலுக்கு அடியில் பதுங்கிக் கொண்டு சத்தம் போட்டார். விஜயகுமாரியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தபோது 6 யானைகளும் அங்கேயே முகாமிட்டிருந்தன.
பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் பொது மக்களுடன் இணைந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பின்னர் அதிகாலை 3ž மணியளவில் வனப்பகுதிக்குள் காட்டு யானைகள் விரட்டப்பட்டன.
இதுகுறித்து தேயிலை தொழிலாளர்கள் கூறும்போது காட்டு யானைகள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு காட்டு யானைகளை விரட்ட வேண்டும். இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில் இதை கண்டித்து சாலைமறியல் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

0 comments: