Thursday, September 11, 2014

On Thursday, September 11, 2014 by Unknown in ,    

சாலை விபத்தில் பெண் மரணமடைந்த நிலையில், அப்பெண்ணின் உறவினர்கள் உடுமலை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜன் என்பவரது ம னைவி அங்கம்மாள் (43). இவர், செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 7 மணி அளவில் கிருஷ்ணாபுரம் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த கார்த்திக்ராஜா (23) என்பவர், ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதியதில் அங்கம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கார்த்திக் ராஜாவை பிடித்து மடத்துக்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போதையில் இருந்த கார்த்திக் ராஜா உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அங்கம்மாளின் சடலம், பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது உறவினர்கள் சடலத்தை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அந்தப் பகுதியில் உடுமலை டிஎஸ்பி (பொறுப்பு) இளங்கோவன் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது அங்கம்மாள் உறவினர்கள் காவல்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த அங்கம்மாளின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கார்த்திக் ராஜாவை கைது செய்து, அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

0 comments: