Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by farook press in ,    
திருப்பூர் : ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிக்கும் புதிய வெளியுறவு வர்த்தக கொள்கையை, மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்ற எதிர்பார்ப்புடன், திருப்பூர் தொழில் துறையினர் உள்ளனர்.

ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. வர்த்தகத்துறை அமைச்சகம், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய வெளியுறவு வர்த்தக கொள்கையை (எப்.டி.பி.,) வெளியிடுகிறது. இதில், ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான பல்வேறு அம்சங்கள் இடம் பெறும்.அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் (போக்கஸ் லிங்டு மார்க்கெட்) ஆடை ஏற்றுமதிக்கு இரண்டு சதவீத ஊக்கத்தொகை; புதிய நாடுகளுக்கு இடையிலான (போக்கஸ் மார்க்கெட்) ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், மூன்று சதவீத சலுகை; ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி மதிப்பை கணக்கிட்டு, கூடுதல் ஏற்றுமதி மதிப்பில் இரு சதவீதத்துக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.மத்தியில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, ஜவுளி கொள்கைக்கான திட்ட வரைவுகளை தயாரித்து, இறுதி கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது. கடந்த 2009ல் வெளியிடப்பட்ட வெளியுறவு வர்த்தக கொள்கை அவகாசம் நிறைவடையும் நிலையில், பல்வேறு சலுகைகள் வழங்கும் புதிய வெளியுறவு வர்த்தக கொள்கை எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு, திருப்பூர் பின்னலாடை துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சக்திவேல் கூறியதாவது: மத்திய அரசின் வெளியுறவு வர்த்தக கொள்கையில், ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் இடம் பெறும். இக்கொள்கையில், 124 புதிய நாடுகளுடனான ஏற்றுமதிக்கு மூன்று சதவீதம்; 24 சிறப்பு புதிய நாடுகளுக்கான ஏற்றுமதிக்கு நான்கு சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதை ஒருங்கிணைந்து, ஒட்டுமொத்தமாக, புதிய நாடுகளுக்கான ஏற்றுமதிக்கு ஐந்து சதவீத ஊக்கத்தொகையை வழங்க வேண்டும். ஆண்டுதோறும் கூடுதலாக மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிக்கு வழங்கும் ஊக்கத்தொகையை, கொள்கை நிறைவடையும் காலம் வரை வழங்கவேண்டும்.அதேபோல், ஏற்றுமதி மதிப்பு அடிப்படையில் நிறுவனங்களுக்கு மதிப்பு வழங்கி, அதன் அடிப்படையில் ஒரு சதவீத "ஸ்கிரிப்' வழங்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது; அதை மீண்டும் அறிவிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை, வர்த்தகத்துறை அமைச்சர் 
நிர்மலா சீத்தாராமனிடம் வழங்கியுள்ளோம். விரைவில் புதிய வெளியுறவு வர்த்தக கொள்கையும் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

0 comments: