Tuesday, August 26, 2014

On Tuesday, August 26, 2014 by TAMIL NEWS TV in ,    


உயர்கல்வியில் வளர்ச்சி
கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை சார்பில் பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் நிறுவனர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு அறக்கட்டளை செயலாளர் பி.சி.பழனிசாமி தலைமை தாங்கினார். தலைவர் ஈ.கே.லிங்கமூர்த்தி, பொருளாளர் ஈ.ஆர்.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
உலகில் உள்ள நாடுகளில் உயர் கல்வித்துறையில் இந்தியா மிகப்பெரிய நாடாக வளர்ச்சி அடைந்து உள்ளது. 1990–ம் ஆண்டில் உயர்கல்வியை பொருத்தவரை இந்தியாவில் 190 பல்கலைக்கழகங்களும், 7 ஆயிரத்து 350 கல்லூரிகளும் இருந்தன. இதில் 4 லட்சத்து 9 ஆயிரத்து 25 ஆயிரம் மாணவ–மாணவிகள் படித்து வந்தனர்.
தற்போது இது படிப்படியாக உயர்ந்து 2011–ம் ஆண்டு 610 பல்கலைக்கழகங்களும், 31 ஆயிரத்து 320 கல்லூரிகளும் என்ற வளர்ச்சியை எட்டியதுடன் 1 கோடியே 46 லட்சத்து 24 ஆயிரத்து 990 மாணவ–மாணவிகள் உயர்கல்வி படித்து உள்ளனர். இது உலக அரங்கில் உயர்கல்வியில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இந்திய வளர்ச்சி கண்டு உள்ளது.
பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்
என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் திறமையானவர்களாக உருவாக நாம் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். சிறந்த பேராசிரியரால் திறமை வாய்ந்த, தலைமை பண்பு கொண்ட பல மாணவர்களை உருவாக்க முடியும். எனவே மாணவ–மாணவிகளுக்கு பேராசிரியர்கள்தான் சிறந்த முன்உதாரணம்.
மாணவ–மாணவிகள் தாங்கள் படித்த அறிவியல் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி சமுதாயம் மற்றும் வர்த்தகத்தில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க முயலவேண்டும்.
என்ஜினீயரிங் மாணவ–மாணவிகளில் 1,000 பேரில் ஒருவர்தான் தொழில் முனைவோராக மாறுகின்றனர். மீதம் உள்ள 999 பேரும் வேலை தேடுபவர்களாக இருக்கின்றனர். இந்தநிலையை இளம் என்ஜினீயர்கள் அனைவரும் மாற்ற வேண்டும். வேலை தேடுபவர்களாக இல்லாமல் மற்றவர்களுக்கு வேலை கொடுப்பவர்களாக ஒவ்வொரு இளம் என்ஜினீயர்களும் தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
என்ஜினீயர்கள் இந்தியாவின் ஒரு சொத்து என்பதை உணரவேண்டும். இந்த நாட்டை நிர்மாணிப்பதில் என்ஜினீயரிங் துறையின் பங்கு மிகவும் மகத்தானது. ஆராய்ச்சி துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறவில்லை. எனவே ஆராய்ச்சி துறையிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
பெண்கள் வளர்ச்சி
1970–ம் ஆண்டுகளில் என்ஜினீயரிங் துறை ஆண்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது இந்த நிலை மாறி ஆண்களை பின்னுக்கு தள்ளிவிட்டு என்ஜினீயரிங் துறையின் தலைமை பொறுப்பில் பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு நல்ல வளர்ச்சி அடைந்து உள்ளனர்.
வாழ்க்கையில் வெற்றி சுலபமாக கிடைத்து விடுவது இல்லை. அதற்காக பல சவால்களை வாழ்க்கையில் துணிந்து சந்திக்க வேண்டும். நேர்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகியவை வெற்றி பெறுவதற்கான வழிகள் என்பதை உணர்ந்து மாணவ–மாணவிகள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார்.
இதைத்தொடர்ந்து கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவ–மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதில், கொங்கு என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் வி.கே.முத்துசாமி, பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் சி.குமாரசாமி, கலை அறிவியல் கல்லூரி தாளாளர் பி.சச்சிதானந்தன், மெட்ரிக் பள்ளி தாளாளர் கே.செங்கோட்டுவேலன் உள்பட பேராசிரியர்கள், பேராசிரியைகள் மற்றும் மாணவ–மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

0 comments: