Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    

திருச்சி,

திருச்சி அரசு மருத்துவமனையில் வெறிநாய் கடிக்கு சிகிச்சை பெற்ற வாலிபர் திடீர் என வெறி பிடித்தவர் போல் ஓடி ஒரு நோயாளியை கடித்தார். இதனால் மற்ற நோயாளிகள் அலறி அடித்து ஓடினார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொல்கத்தா வாலிபர்

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சலீம் (வயது35). இவர் கரூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து கொசு வலை வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் அவரை ஒரு வெறி நாய் கடித்தது. இதனால் பாதிக்கப்பட்ட சலீம் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் நேற்று மதியம் ஒரு மணி அளவில் சலீமை அவரது மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

ஜன்னலை உடைத்தார் 

 மாலை 4 மணி அளவில் திடீர் என அவர் அறையை விட்டு வெளியே வந்தார். மனைவி மற்றும் மைத்துனருடன் பேசினார். அவரது பேச்சு மற்றும் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்ததால் அறையில் தள்ளி பூட்டு போட்டு பூட்டினார்கள். இந்நிலையில் மாலை 6 மணி அளவில் சலீம் திடீர் என அந்த அறையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே குதித்தார். அவர் உடலில் துணி எதுவும் இன்றி நிர்வாணமாக ஓடினார். நாய் குரைப்பது போல் சத்தம் போட்டுக்கொண்டே ஆவேசமாக ஓடி வந்தார். அப்போது எதிரே ஒரு அறையில் இருந்த நோயாளிகள் கிரில் கேட் கதவை இழுத்து சாத்தினார்கள். அந்த கதவை அசைத்து பார்த்து விட்டு திறக்க முடியாத சலீம் பின்னர் இன்னொரு அறையை பார்த்து ஓடினார்.

நோயாளியை கடித்தார் 
சலீம் வேகமாக ஓடி வருவதை பார்த்த நர்சுகள், மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஓடிப்போய் தங்களது அறையில் கதவை சாத்திக்கொண்டார்கள். அப்போது படுக்கையில் இருந்த ஒரு நோயாளியின் இடது தொடையில் சலீம் கடித்தார். கடிபட்டவரின் பெயர் அர்ஜுனன் (வயது30) புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பக்கம் உள்ள விழாப்பட்டியை சேர்ந்த இவர் ஏற்கனவே விபத்தில் காயம் அடைந்ததால் காலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். சலீம் கடித்ததை பார்த்ததும் அந்த அறையில் இருந்த மற்ற நோயாளிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள்.

ஒரு மணி நேரம் அட்டகாசம் 

சலீம் வெறி பிடித்தவர் போல் ஓடி எல்லோரையும் கடிக்க முயன்றதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் அவரது அட்டகாசம் நீடித்தது. ஒரு வழியாக மருத்துவமனை பாதுகாவலர்கள் மற்றும் போலீசார் சேர்ந்து சலீமை பிடித்து கைகளை கட்டி ஒரு தனியறையில் அடைத்தனர். அந்த அறையை சுற்றி இருந்த படுக்கைகளில் இருந்த நோயாளிகள் அனைவரும் மாடி பகுதிக்கு உடனடியாக மாற்றப்பட்டனர். ஆனாலும் சில நோயாளிகள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி மறியல் செய்வதற்காக மருத்துவமனையின் வெளி பகுதிக்கு வந்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனை போலீசார் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: