Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by Unknown in ,    


திருப்பூர் மாவட்டம், மூலனூர் சர்வோதய சங்கத்தின் சார்பில், வடுகபட்டி சாலையில் காதி பவன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, திருப்பூர் தமிழ்நாடு சர்வோதய சங்கச் செயலாளர் ஏ.செந்தில்நாதன் தலைமை வகித்தார். மூலனூர் சர்வோதய சங்கச் செயலாளர் சி.ராமசாமி வரவேற்றார். திருப்பூர் சங்க பொருளாளர் எஸ்.ராஜு, மூலனூர் கனரா வங்கி முதுநிலை மேலாளர் பி.பரமசிவம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கோவை, கதர் கிராமத் தொழில்கள் ஆணைய உதவி இயக்குநர் ஆர்.கணேசன் முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார்.
இதில், காதி பவனை திறந்து வைத்து கதர் கிராமத் தொழில்கள் ஆணைய மாநில இயக்குநர் டி.தனபால் பேசியது:
கதர் தொழில்களை மேம்படுத்த, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி அளித்து வருகிறது. இவற்றின் உற்பத்தி, விற்பனை, தொழிலாளர்கள் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் சிறப்பான ஒத்துழைப்பு மூலம் தற்போது இதற்காக ரூ. 750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக தமிழகத்தில் 5 கதர் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மேம்பாட்டுப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. மேலும் 11 நிறுவனங்கள் இணைய உள்ளன. கதர் தொழில்கள் மூலம் உற்பத்தியாகும் தரமான பொருள்களை தனியாரைப் போல நவீன விற்பனையகங்கள் மூலம் விற்றால், அதிக வாடிக்கையாளர்களைப் பெற முடியும். கதர் கிராமத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் கிளஸ்டர் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது என்றார்.
மூலனூர் சங்கத் தலைவர் கே.ஈஸ்வரன், பொருளாளர் கே.பாண்டித்துரை, கிளை மேலாளர் அன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்க நிர்வாகி கே.லிங்கசாமி நன்றி கூறினார்.

0 comments: