Monday, September 08, 2014

On Monday, September 08, 2014 by Unknown in ,    
மதுரை சின்னசொக்கி குளத்தை சேர்ந்தவர் ஜமால் முகம்மது (வயது61), ரியல் எஸ்டேட் அதிபர். இவர் சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமாகிவிட்டார். இதுகுறித்து அவரது உறவினர்கள் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தனர்.
இந்த நிலையில் மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த சங்கர் என்ற வாலிபர் மேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவர் ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகம்மதுவிடம் வேலை பார்த்து வந்ததாகவும், ரூ.2 லட்சம் பணம் தரமறுத்ததால் கொடைக்கானல் மலையில் வைத்து கொலை செய்து விட்டு, உடலை பள்ளத்தில் வீசி விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து சங்கர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்பட்ட திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி (39) என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.
மாயமான ஜமால் முகம்மது கொலை செய்யப்பட்டாரா? என்பதை ஊர்ஜிதப்படுத்த மதுரை தல்லாகுளம் சப்–இன்ஸ்பெக்டர் கார்த்திக்செல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொடைக்கானலுக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே 100 அடி பள்ளத்தில் எரிந்த நிலையில் ஆண் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்து புதைத்து விட்டனர்.
உடல் அருகே கிடந்த ஆடை மற்றும் சில பொருட்களை கைப்பற்றிய கொடைக்கானல் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த உடல் ரோட்டில் இருந்து 100 அடிபள்ளத்தில் தூக்கி எறிந்துள்ளதால் அந்த உடல் மதுரையில் மாயமான ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகம்மதுவின் உடலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனவே இதுகுறித்து மதுரை தனிப்படை போலீசார் கொடைக்கானல் போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாயமான ஜமால் முகம்மதுவின் உறவினர்களையும் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள்.
இதனிடையே கோர்ட்டில் சரண் அடைந்த சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சித்திக், மார்த்தாண்டன், மாரியப்பன் ஆகியோரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

0 comments: