Thursday, September 11, 2014

On Thursday, September 11, 2014 by Unknown in ,    


stalin, dmk, karunanithi

தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, பொதுச் செயலாளர் க. அன்பழகன் ஆகியோரிடம் தெரிவித்து, அவர்களது ஆலோசனைகளைப் பெற்ற பிறகே மாவட்டங்கள் தோறும் சென்று நிர்வாகிகளைச் சந்தித்து வருவதாக தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தி.மு.க. தலைவரின் உடல் நிலை ஒத்துழைக்காத காரணத்தால், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழக்க என்ன காரணம் என்பதை அறிவதற்காக, கட்சித் தலைவர், பொதுச் செயலாளர் வகுத்துத் தந்த பாதையில் தான் பணியாற்றிவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

"தலைவரின் அடிஒற்றி நடப்பவன்"

"இந்தச் சுற்றுப் பயணத் துவக்கத்திலேயே சில ஏடுகள் தலைமையைப் பிடிக்கத் திட்டமிட்டு ஸ்டாலின் சுற்றுப்பயணம் எனத் தலைப்பு" இட்டிருந்ததாகவும் "தலைவரையும் இந்த இயக்கத்தையும் யாராலும் பிரித்துப் பார்க்க முடியாது. என்னைப் பொறுத்தவரை நான் தலைவரின் அடி ஒற்றி நடப்பவன்" என்றும் "தலைவரின் அறிவு, ஆற்றல், அரசியல் வியூகங்கள், ஓய்வறியா உழைப்பு என அத்தனை குணங்களையும் பெற்றவர்கள் தோன்றுவது எளிதல்ல; அதனை உணர்ந்தவன் நான்" என்றும் ஸ்டாலின் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

"தலைவருக்கும் எனக்கும் இடையே பிளவை உருவாக்கிட நினைத்து கண்டதை எழுதுபவர்களுக்குக் கூறிக்கொள்வேன் - சிண்டு முடியும் வேலையை தொடராமல் இனியாவது நிறுத்துங்கள்" என ஸ்டாலின் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் அவரது மகனும் கட்சியின் பொருளாளருமான மு.க. ஸ்டாலினுக்கும் இடையில் மோதல் இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில், மு.க. ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

0 comments: