Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி கடைசி ஞாயிறு வழிபாட்டையொட்டி நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

ஆவணி சிறப்பு வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டுக்கு புகழ்பெற்ற புண்ணிய தலம் நாகர்கோவில் நாகராஜா கோவில். இதில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை என்றால் மிகவும் பிரசித்தம். களக்காட்டை தலைநகராகக் கொண்டு வேணாட்டை ஆண்ட பூதல வீரஉதயமார்த்தாண்ட மன்னன் சருமநோயால் அவதிப்பட்டதாகவும், இதைத்தொடர்ந்து ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜா கோவிலில் வழிபட்டு குணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த கோவிலில் கட்டுமான பணிகளை முதன்முதலில் அந்த மன்னன் மேற்கொண்டதாக வரலாறு கூறுகிறது. 

இத்தகைய சிறப்பு பெற்ற ஆவணி ஞாயிறு வழிபாடு அன்றுமுதல் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இந்த ஆண்டு ஆவணி மாத சிறப்பு வழிபாடு கடந்த 5 வாரங்களாக நடைபெற்றது. 5–வது ஆவணி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, திருவனந்தபுரம் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

நீண்ட வரிசை

இவர்களில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட வந்த பக்தர்கள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். இந்த வரிசை, கோவிலில் இருந்து அருகில் உள்ள தலைமை தபால் நிலையம் வரை நீண்டது. வழக்கமான நேரத்துக்கு முன்னதாகவே கூட்டம் அலைமோதியதால், அங்கு ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் நடை வழக்கமான நேரத்திற்கு முன்பே நேற்று திறக்கப்பட்டுவிட்டது. அதைப்போல மதியமும் நடை அடைக்கப்படுவதில் காலதாமதம் செய்யப்பட்டது. சிறப்பு நிகழ்ச்சியாக கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. 

அன்னதானம் 

மேலும், பொதுப்பணித்துறை மற்றும் விவசாயிகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதான நிகழ்ச்சி பாரம்பரியப்படி ஆண்டுதோறும் ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. நேற்றைய அன்னதான நிகழ்ச்சியை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதார அமைப்பு) சுப்பிரமணி தொடங்கி வைத்தார். உதவி செயற்பொறியாளர்கள் ஹெரால்டு ஈனாக், அனிதாசாந்தி, உதவி பொறியாளர்கள் வல்சன்போஸ், ஜெயகுமார், மைக்கேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

பக்தர்கள் வருகையையொட்டி கோவில் வளாகம் மற்றும் கோவிலின் எதிரில் உள்ள ரதவீதியில் திருவிழா கடைகள் தொடங்கப்பட்டிருந்தன. பால் விற்பனையும் நடைபெற்றது. நாகராஜா திடல் முழுவதும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. 

0 comments: