Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
வத்தலக்குண்டு அருகே ரேசன் கடை ஊழியர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். அங்கு பொதுமக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ரேசன் கடையில் தகராறு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் ரெங்கப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தெப்பத்துப்பட்டியில் ரேசன் கடை உள்ளது, இந்த கடையில் 470 ரேசன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேசன் கடையில் ஊழியராக சுப்பிரமணியும், உதவியாளராக பட்சிராஜனும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று பகலில் அந்த ஊரைச் சேர்ந்த வீரம்மாள் என்பவர் ரேசன் பொருட்கள் வாங்க வந்தார். அப்போது சில பொருட்கள் இல்லை என்று சுப்பிரமணி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

சிறைபிடிப்பு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஊர் பொதுமக்கள் ரேசன் கடைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சுப்பிரமணி, பட்சிராஜன் ஆகிய இரண்டு பேரையும் ரேசன் கடைக்குள் பூட்டி வைத்தனர். ரேசன் கடை ஊழியர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வருவாய் அலுவலர்கள் துரைப்பாண்டி, அபிராமி, கிராம நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் விருவீடு போலீசார் ஆகியோர் தெப்பத்துப்பட்டி கிராமத்துக்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் சுப்பிரமணி, பட்சிராஜன் இரண்டு பேரையும் வேறு ஊருக்கு இடம் மாற்றம் செய்வதாக அதிகாரிகள் உறுதி கூறினார்கள். இதைத்தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்ட இரண்டு பேரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் தெப்பத்துப்பட்டியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பான சூழ¢நிலை நிலவியது.

0 comments: