Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
திண்டுக்கல்,
உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற சம்பவம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓடும் பஸ்சில் அறிமுகமாகி, கைவரிசை காட்டிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஓடும் பஸ்சில் அறிமுகம்
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த கோம்பை அருகே உள்ள சின்னழகநாயக்கனூரை சேர்ந்தவர் முருகேசன். அவருடைய மனைவி ராஜலட்சுமி (வயது 54). கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவறி விழுந்ததில் இவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இதற்காக, ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் தனது மகளுடன் அந்த ஆஸ்பத்திரிக்கு ராஜலட்சுமி சென்றார். ஆஸ்பத்திரியில் சிகிச்சையை முடித்து விட்டு வேடசந்தூர் நோக்கி சென்ற ஒரு பஸ்சில் 2 பேரும் பயணம் செய்தனர்.
அப்போது அவர்களது இருக்கையின் பின்புறத்தில் உள்ள இருக்கையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் உட்கார்ந்து இருந்தார். அந்த நபர், ராஜலட்சுமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார். ராஜலட்சுமியின் ஊர், முகவரி மற்றும் குடும்ப பின்னணி பற்றி கேட்டறிந்தார். தனது பெயர் மோகன் என்றும், தனது தந்தை ஒட்டன்சத்திரத்தில் போலீஸ்காரராக வேலை செய்வதாகவும் கூறி தன்னை அறிமுகப்படுத்தினார்.
முதியோர் உதவித்தொகை
தனக்கு தெரிந்த அதிகாரிகள், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிகின்றனர் என்றும், அவர்கள் மூலம் முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாகவும் ராஜலட்சுமியிடம் ஆசை வார்த்தை கூறினார். மேலும ராஜலட்சுமி கொடுத்த முகவரிப்படி அவரது வீட்டுக்கு அந்த நபர் சென்றார்.
மேலும் கலெக்டர் அலுவலகத்துக்கு ராஜலட்சுமியை நேற்று வரச்சொன்னார்.
அதன்படி சின்னழகநாயக்கனூரில் இருந்து திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு ராஜலட்சுமி பஸ்சில் வந்தார். ராஜலட்சுமியை எதிர்பார்த்து, திண்டுக்கல் பஸ் நிலையத்தில் அந்த நபர் காத்திருந்தார். ராஜலட்சுமி வந்தவுடன், அவரை கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு பஸ்சில் அவர் அழைத்து சென்றார்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் ராஜலட்சுமியை அவர் உட்கார வைத்தார். பின்னர் ராஜலட்சுமியிடம் அந்த நபர், சங்கிலி மற்றும் கம்மல் அணிந்தபடி அதிகாரியை சந்தித்தால் வசதி படைத்தவர்கள் என்று கூறி உதவித்தொகை வழங்க மாட்டார் என்றும், கம்மல், சங்கிலி ஆகியவற்றை கழற்றும்படி சொன்னார்.
கம்மல், செல்போன் பறிப்பு
இதை உண்மையென நம்பிய ராஜலட்சுமியும் தான் அணிந்திருந்த சங்கிலி மற்றும் கம்மலை கழற்றினார். பின்னர் அவைகளை தான் வைத்திருந்த பணப்பையில் வைத்திருந்தார். அந்த பைக்குள் ஒரு செல்போன் மற்றும் ரூ.500 ஏற்கனவே இருந்தது. பணப்பையை தன்னிடம் தருமாறு அந்த வாலிபர் கேட்டார்.
அப்போது, தான் வைத்து கொள்வதாக ராஜலட்சுமி கூறினார். அதற்கு அந்த நபர், பையுடன் உள்ளே சென்றால் கலெக்டர் அலுவலகத்தில் பொருத்தியுள்ள கருவி மூலம் தங்க பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து, முதியோர் உதவித்தொகை தர மாட்டார்கள் என்று கூறி பணப்பையை வாங்கி கொண்டார்.
பின்னர் ராஜலட்சுமியை மரத்தடியில் உட்கார்ந்து இருக்குமாறு கூறி சென்ற அந்த நபர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. பணப்பையுடன் அவர் மாயமாகி விட்டார். அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை ராஜலட்சுமி உணர்ந்தார்.
போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ராஜலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜலட்சுமி அணிந்திருந்த கம்மல் மட்டும் ½ பவுன் மதிப்புள்ள தங்க நகை என்றும், அந்த சங்கிலி ‘கவரிங்‘ என்றும் தெரியவந்தது.
இதற்கிடையே மூதாட்டியை ஏமாற்றிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 comments: