Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
வடமதுரை அருகே மூதாட்டியை கொலை செய்து பணம், நகையை மர்ம மனிதர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

மூதாட்டி கொலை

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள தாமரைப்பாடியைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். (வயது 54). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி எலிசபெத் ராணி (50). இவர் முள்ளிப்பாடியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு லியோ பிரான்சிஸ் என்ற ஒரு மகன் உள்ளார். அவர் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று எலிசபெத் ராணி வேலைக்கு சென்று விட்டார். மதியம் ஆரோக்கியதாஸ் சொந்த வேலை காரணமாக வெளியே சென்று இருந்தார். வீட்டில் ஆரோக்கியதாசின் தாயார் அந்தோணியம்மாள் (75) என்பவர் மட்டும் தனியாக இருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் ஆரோக்கியதாசின் வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கு வீட்டில் இருந்த அந்தோணியம்மாளை அவர்கள் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

நகை, பணம் கொள்ளை

பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த பீரோவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த சுமார் 6½ பவுன் தங்க நகைகளையும், ரூ.10 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றனர். பின்னர் வீடு திரும்பிய ஆரோக்கியதாஸ் வீட்டிற்குள் தாயார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அறிவழகன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீனிவாசன், போலீஸ் துணை சூப்பிரண்டு வனிதா, இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் ஆகியோர் விரைந்து வந்தனர்.

மோப்ப நாய் சோதனை

பின்னர் கைரேகை நிபுணர் வரவழைத்து வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். மோப்ப நாய் லிண்டா வரவழைக்கப்பட்டு வீட்டில் உள்ள அறைகளில் சோதனை செய்யப்பட்டது. அப்போது வீட்டில் இருந்து சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் செட்டியப்பட்டி பிரிவு வரை மோப்ப நாய் ஓடி நின்றது. ஆனால் யாரையும் மோப்ப நாய் கவ்வி பிடிக்கவில்லை.

அந்தோணியம்மாளின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் கருப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம மனிதர் அந்தோணியம்மாளிடம் பேசிக்கொண்டு இருந்ததாக உறவினர் ஒருவர் தெரிவித்தார். அவர் கூறிய அடையாளத்தை வைத்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்து நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: