Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by Unknown in ,    
மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–
1986–ம் ஆண்டிலிருந்து ஆசிய யானைகளின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. யானைகள் காடுகளில் 18 மணி நேரம் வரை உணவு தேடி அலையும். சுமார் 70 வயது வரை வாழும். கோவில், வீடுகளில் யானைகளை கான்கிரீட் தரையில் அடைத்து வைத்து நடக்கவிடாமல் வளர்க்கின்றனர்.
இந்தியாவில் யானைகளை பழக்குவது, வணிக ரீதியாக பயன்படுத்துவது நீண்ட காலமாக தொடர்கிறது. தற்போது அதிகாரிகளின் கவனக்குறைவால் அவை துன்புறுத்தப்படுகிறது. இதனால் யானைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றன. காட்டில் தனது குடும்பத்துடன் வாழும் யானைகளை கோவிலில் தனியாக அடைத்து வைப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது.
யானைகள் 10 வயது வரையில் குட்டிகளுக்கு பால் கொடுக்கும். ஆனால் குட்டிகளை உடனடியாக தாயிடம் இருந்து பிரித்து பயிற்சி என்ற பெயரில் துன்புறுத்துகின்றனர். யானைகள் துன்புறுத்தல் பெரும்பாலும் கோவில் திருவிழாக்களில் அவற்றை உட்கார விடாமல் நீண்ட நேரம் நிற்க வைப்பது, தேவையான உணவு கொடுக்காதது, வெயிலில் இருக்கச்செய்தல், அலங்காரம் என்ற பெயரில் அதிக எடையுள்ள பொருட்களை அவற்றின் மீது சுமத்துவது என பல வகைகளிலும், சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரிலும் கொடுமைப் படுத்துகின்றனர். இதனால் சில யானைகள் மிரண்டு தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது.
ஆசிய யானைகள் அழியும் நிலையில் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே கோவில் மற்றும் வீடுகளில் உள்ள யானைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைக்க வேண்டும். கோவில் மற்றும் வீடுகளில் யானைகள் வளர்க்கவும், வைத்திருக்கவும் தடை விதிக்க வேண்டும். யானை வளர்க்க யாருக்கும் புதிதாக லைசென்ஸ் (உரிமம்) வழங்கக்கூடாது என உத்தர விட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகா தேவன் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல்கள் லஜபதிராய், திருமுருகன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
மனு குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர், வனத்துறை முதன்மை செயலாளர், இந்து அறநிலையத்துறை முதன்மை செயலாளர் மற்றும் கமிஷனர், முதன்மை வனப் பாதுகாவலர், விலங்கின வதை தடுப்பு நல அமைப்பு உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்

0 comments: