Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by Unknown in , ,    
இயற்கை என்றால் நம் நினைவுக்கு வருவது எல்லாம் பசுமையான மரங்கள், வயல்வெளிகள், நீளமான வானமும் தான். ஆனால் இயற்கையின் மற்றொரு உருவான மலைகளும் அழகுதான். வெறும் காய்ந்த பாறைகளும், பறந்து விரிந்த மலைகளும் அழகு என உணரவேண்டும் என்றால் நார்த்தாமலைக்கு வாருங்கள்.
திருச்சி-புதுகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் நார்த்தாமலை ஊர் அமைந்துள்ளது. நார்த்தாமலை பேருந்து நிலயத்தில் இருந்து சற்று நடந்தால் நர்த்தாமலையை அடையலாம். இவ்வூர் மேலமலை, கோட்டைமலை, கடம்பர் மலை, பறையன் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண் மலை, பொன் மலை என ஒன்பது மலைகளை கொண்டுள்ளது. இதில் மேலமலை, சமணர் மலை என்றும் கூறபடுகிறது. இந்த மலைகளும் வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகளையும், சிற்பங்களையும், கோவில்களையும் கொண்டுள்ளன.
நார்த்தாமலையை 8 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களும், பிறகு மூன்றாம் நந்திவர்மனும் ஆட்சி செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சோழர் காலத்தில் விஜயாலய சோழனால் 9 ஆம் நூற்றாண்டிலும் பிறகு முதலாம் ராஜ ராஜ சோழன், முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜேந்திரன் ஆகியோராலும் ஆட்சி செய்யப்பட்டதாக வரலாற்றில் காணப்படுகிறது.
விஜயாலய சோழீஸ்வரம் கோவில் மலை உச்சியில் கட்டப்பட்டுள்ளது. சோழர்களின் கலை நுணுக்கம் இப்போதும் எப்போதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதாகவே அமைந்திருக்கிறது. தமிழக வரலாற்றில் இந்த கோவில் மிக முக்கியமானது என்றால் அது மிகை ஆகாது. கோவில் மேற்பரப்பில் அழகிய விமானம் போன்று வடிமைக்கப்பட்டுள்ளது. நந்தி மண்டபம் ஒன்று வாசலை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. உலகில் நம் முன்னோர்களின் திறமையும், கலைநயமும் ஓங்கி இருப்பதை காணலாம்.
இந்த இடத்தில் சமணர்கள் பிற்காலத்தில் வாழ்ந்ததற்கான கல்வெட்டுகளும், சிற்பங்களும் காணப்படுகின்றன. இங்கிருந்து கடம்பர் மலைக்கு நடந்து சென்றால் அங்கும் சிவன் கோயில் ஒன்று நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றது. நம் முன்னோர்கள், நம்மைவிட பல மடங்கு திறமைசாலிகள் என்பது இந்த இடத்தில் ஆக்கபூர்வமாக உறுதி ஆகின்றது. இந்த இடத்தின் கலைநயம் சொல்லும், விஞ்ஞானம் இல்லாமல் விந்தைகள் பல நடந்த யுகம் நம் முன்னோர்கள் காலம் என்று.

இங்கு அழகிய கல்வெட்டுகள் காணப்டுகின்றன. கடம்பர் மலையில் முன்னொரு காலத்தில் தேர் திருவிழா நடந்தாகவும், அந்த  தேர் சென்ற சுவடுகள் இங்கு பாறையில் பதிந்து இருப்பதாகவும் இந்த ஊர் மக்கள் நம்புகின்றனர். அதற்கான சுவடுகள் சற்றே இருந்தன. கடம்பர் மலை மீது நீங்கள் நின்று பார்த்தல் இயற்கையின் அழகு உங்களை சற்று உறைய வைக்கும். கடம்பர் மலை அடியில் கடம்பர் கோவிலும், அதற்கு முன்பு மங்கள தீர்த்தம் நிரம்பிய குளம் ஒன்றும் உள்ளது. கடம்பர் மலை அருகில் மேல மலையும், பறையன் மலையும் உள்ளது. நார்த்தாமலையில் உள்ள மற்றொரு மலை ஆளுருட்டி மலை. அதன் அடிவாரத்தில் இரண்டு கற்சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு, குகை வடிவம் கொண்ட தொங்கும் சிற்பங்கள் சமணர்களை குறிப்பதாக  உள்ளது. இந்த இடம் மாரவர்மன் சுந்தரபாண்டியனால் ஆட்சி செய்யப்பட்டது என்பது வரலாறு.

இப்படி காலத்தால் போற்றவேண்டிய காலச்சுவடுகள் நிறைந்த இந்த நார்த்தாமலையை குறித்து அப்பகுதி மக்களுக்குக் கூட சரியாக தெரியவில்லை. அதேபோல், இந்த இடங்களை பற்றிய வரலாற்று குறிப்புகள் கூட தொல்லியல் துறையிடம் போதுமான அளவுக்கு இல்லை. இந்த பகுதி நம்மால் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும், மாணவர்கள் படிப்பிற்கு ஆராய்ச்சி செய்யும் வகையில் அரசாங்கம் மாற்றினால் நம் முன்னோர்களின் சிறப்பை நாம் நமது அடுத்த தலைமுறைக்கு பரிசளிக்கலாம்.

காலத்தின் பொக்கிஷங்களை காப்பது அரசாங்கத்தின் கடமை மட்டும் அல்ல பொதுமக்களின் கடமையும் கூட. இந்த வரலாற்று சிறப்பை பற்றி அங்குள்ள மக்களுக்கு தெரியபடுத்தி காலச்சுவடை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தொல்லியல் துறைக்கு உள்ளது.

காலச்சுவடுகள் காப்பாற்றபடுமா! காப்பற்றபட்டால் தமிழர்களின் பெருமையையும், கலை நுணுக்கத்தையும் உலகம் அறியும்...

0 comments: