Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
குமரி மாவட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் நாகராஜன் மற்றும் தேர்தல் பார்வையாளர் கந்தசாமி ஆகியோர் தலைமையில் நடந்தது.

ஆலோசனைக் கூட்டம்

தமிழகம் முழுவதும் உள்ளாட்சிமன்ற பதவிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18–ந் தேதி நடைபெறுகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சிமன்ற இடைத்தேர்தலில் மொத்தம் உள்ள 33 பதவியிடங்களுக்கு 107 பேர் போட்டியிடுகிறார்கள். 16 பதவிகளுக்கு வேட்பு மனுதாக்கல் செய்த வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் நாகராஜன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஒத்துழைப்பு

நடைபெற உள்ள உள்ளாட்சிமன்ற இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டு விதிமுறைகளை அனைத்து அரசியல் கட்சியினரும் பின்பற்றி, அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பிரசார வாகனங்களுக்கான அனுமதிச் சீட்டுகளை அந்தந்த உதவி தேர்தல் அதிகாரிகளிடம் பெற்றுக் கொள்ளலாம்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏதாவது சந்தேகம் இருந்தால் அந்தந்த உள்ளாட்சி மன்றங்களுக்கான உதவி தேர்தல் அதிகாரிகளை அணுகி உங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் நாகராஜன் பேசினார்.

தேர்தல் பார்வையாளர்

முன்னதாக உள்ளாட்சிமன்ற தேர்தலுக்கான குமரி மாவட்ட தேர்தல் பார்வையாளரும், தமிழக நில நிர்வாக இணை ஆணையருமான கே.எஸ்.கந்தசாமி தலைமையில் உள்ளாட்சித் தேர்தல் உதவி தேர்தல் அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர் கந்தசாமி பேசும்போது கூறியதாவது:–

நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் உதவித் தேர்தல் அதிகாரிகள் தேர்தல் பணியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். எந்தெந்த பகுதியில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை முன்பே அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் நடைபெற உள்ள உள்ளாட்சிமன்ற பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு பூத் சிலிப்களை அந்தந்த பகுதி சத்துணவு அமைப்பாளர்கள் மூலமாக நேரடியாக வழங்கச் செய்ய வேண்டும்.

பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அந்த வாக்குச்சாவடிக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

இவ்வாறு தேர்தல் பார்வையாளர் கந்தசாமி பேசினார்.

அதிகாரிகள்

இந்த கூட்டங்களில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, உதவி சூப்பிரண்டு விக்ராந்த் பாட்டில் (தக்கலை), துணை சூப்பிரண்டுகள் பேச்சிமுத்துப் பாண்டியன் (நாகர்கோவில்), செல்வராஜ் (கன்னியாகுமரி) மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகளில் அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் சந்திரன், ஒன்றிய செயலாளர் அசோக்குமார், சஞ்சய், பா.ஜனதா சார்பில் கோட்ட அமைப்புச் செயலாளர் கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்ணன், மணி மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

0 comments: