Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
நாகை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் முனுசாமி மாணவ-மாணவிகளுக்கு கலவை சாதம் வழங்கினார்.

கலவை சாதம்

நாகை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் சத்துணவு மையத்தில் மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவில் கலவை சாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு கலவை சாதங்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 2 முதல் 5 வயது வரை உள்ள முன் பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சத்துணவு மையங்களில் உணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கும் மதிய உணவில் பலவகை கலவை சாதம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு திங்கட்கிழமை தக்காளி சாதம் மற்றும் வேகவைத்த முட்டை, செவ்வாய்க்கிழமை காய்கறி கலவை சாதம் மற்றும் சுண்டல், புதன்கிழமை காய்கறி புலவு சாதம் மற்றும் வேகவைத்த முட்டை, வியாழக்கிழமை எலுமிச்சை சாதம் மற்றும் வேகவைத்த முட்டை, வெள்ளிக்கிழமை பருப்பு சாதம் மற்றும் வேகவைத்த உருளைக்கிழங்கு, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் காய்கறி கலவை சாதம் ஆகியவை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அரசு பள்ளி

அதேபோல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சத்துணவு மையங்களில் உணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கு முதல் மற்றும் 3-ம் வாரம் திங்கட் கிழமை வெஜிடபிள் பிரியாணி, மிளகு முட்டை, செவ்வாய்க்கிழமை கொண்டக்கடலை, புலாவு, தக்காளி மசாலா முட்டை, புதன்கிழமை தக்காளி சாதம், மிளகு முட்டை, வியாழக்கிழமை சாம்பார் சாதம், சாதா முட்டை, வெள்ளிக்கிழமை கறிவேப்பிலை சாதம் அல்லது கீரை சாதம், உருளை கிழங்கு தக்காளி சேர்த்து வேகவைத்த முட்டையும், 2-வது மற்றும் 4-வது வாரத்தில் திங்கட்கிழமை பிசிபேளாபாத், வெங்காயம், தக்காளி முட்டை மசாலா, செவ்வாய்க்கிழமை மிக்சர்ட் மீல் மேக்கர் மற்றும் காய்கறிகள் சாதம், மிளகு முட்டை, புதன் கிழமை புளி சாதம், தக்காளி மசாலா முட்டை, வியாழக்கிழமை எலுமிச்சை சாதம், மசாலா முட்டை, வெள்ளிக்கிழமை சாம்பார் சாதம், வேகவைத்த முட்டை அல்லது வறுத்த உருளைக்கிழங்கும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

சர்க்கரை பொங்கல்

நாகை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் செயல்படும் ஆயிரத்து 325 அங்கன்வாடி மையங்களில் 28 ஆயிரத்து 109 குழந்தைகளுக்கும், மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்படும் ஆயிரத்து 162 சத்துணவு மையங்களில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 45 மாணவ, மாணவிகளுக்கும் பலவகை கலவை சாதங்கள் வழங்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பள்ளியில் மதிய உணவாக மாணவ, மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கலும், அங்கன்வாடி குழந்தைகளுக்கு தக்காளி சாதத்துடன் முட்டை மற்றும் சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை கலெக்டர் முனுசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சிவஞானபாரதி, நகரசபை தலைவர் மஞ்சுளா சந்திரமோகன், நகராட்சி ஆணையர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: