Showing posts with label நாகை. Show all posts
Showing posts with label நாகை. Show all posts

Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
நாகை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 8½ கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதிகாரிகள் கண்காணிப்பு
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி செல்லப்படுவதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து அதிகாரிகள் தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று மதியம் அதிகாரிகள் மேலசாலை பகுதியில் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வேகமாக வந்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். மேலும் காரில் இருந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
பறிமுதல்
விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அதிகாரிகளுக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. எனவே அதிகாரிகள் காரில் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது காரின் கியர் பாக்ஸ் அடியில் 19 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தங்க கட்டிகளை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவற்றை காரில் இருந்து வெளியே எடுத்து ஆய்வு செய்தனர்.
தங்க கட்டிகளின் மொத்த எடை 8 கிலோ 536 கிராம் என தெரியவந்தது. இதன்மதிப்பு சுமார் ரூ.2 கோடியே 30 லட்சம் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தங்க கட்டிகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கைது
இதைத்தொடர்ந்து காரில் இருந்த 2 பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த முகமது பாசில் (வயது 25) மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த யாசர் அராபத் (20) என்பதும் தெரியவந்தது.
முகமது பாசில், யாசர் அராபத் ஆகிய இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டதா? அல்லது வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டதா? இந்த கடத்தலில் மேலும் யாரும் சம்பந்தப்பட்டுள்ளனரா? என பிடிபட்ட 2 பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். இதனை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை மீட்கும் வரை, பூம்புகார் பகுதி மீனவர்கள் கடந்த 6 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தி.மு.க. நாகை மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ்.விஜயன் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரைநேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மோகன அன்பழகன், நகர செயலாளர் சுப்புராயன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் தியாக விஜயேஸ்வரன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் ரவி, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் அம்பலவாணன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சசிக்குமார், துரைராஜன், கட்சிப்பிரமுகர்கள் மாரிமுத்து, குணசேகரன், முல்லைவேந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
நாகை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் முனுசாமி மாணவ-மாணவிகளுக்கு கலவை சாதம் வழங்கினார்.

கலவை சாதம்

நாகை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் சத்துணவு மையத்தில் மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவில் கலவை சாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு கலவை சாதங்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 2 முதல் 5 வயது வரை உள்ள முன் பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சத்துணவு மையங்களில் உணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கும் மதிய உணவில் பலவகை கலவை சாதம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு திங்கட்கிழமை தக்காளி சாதம் மற்றும் வேகவைத்த முட்டை, செவ்வாய்க்கிழமை காய்கறி கலவை சாதம் மற்றும் சுண்டல், புதன்கிழமை காய்கறி புலவு சாதம் மற்றும் வேகவைத்த முட்டை, வியாழக்கிழமை எலுமிச்சை சாதம் மற்றும் வேகவைத்த முட்டை, வெள்ளிக்கிழமை பருப்பு சாதம் மற்றும் வேகவைத்த உருளைக்கிழங்கு, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் காய்கறி கலவை சாதம் ஆகியவை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அரசு பள்ளி

அதேபோல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சத்துணவு மையங்களில் உணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கு முதல் மற்றும் 3-ம் வாரம் திங்கட் கிழமை வெஜிடபிள் பிரியாணி, மிளகு முட்டை, செவ்வாய்க்கிழமை கொண்டக்கடலை, புலாவு, தக்காளி மசாலா முட்டை, புதன்கிழமை தக்காளி சாதம், மிளகு முட்டை, வியாழக்கிழமை சாம்பார் சாதம், சாதா முட்டை, வெள்ளிக்கிழமை கறிவேப்பிலை சாதம் அல்லது கீரை சாதம், உருளை கிழங்கு தக்காளி சேர்த்து வேகவைத்த முட்டையும், 2-வது மற்றும் 4-வது வாரத்தில் திங்கட்கிழமை பிசிபேளாபாத், வெங்காயம், தக்காளி முட்டை மசாலா, செவ்வாய்க்கிழமை மிக்சர்ட் மீல் மேக்கர் மற்றும் காய்கறிகள் சாதம், மிளகு முட்டை, புதன் கிழமை புளி சாதம், தக்காளி மசாலா முட்டை, வியாழக்கிழமை எலுமிச்சை சாதம், மசாலா முட்டை, வெள்ளிக்கிழமை சாம்பார் சாதம், வேகவைத்த முட்டை அல்லது வறுத்த உருளைக்கிழங்கும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

சர்க்கரை பொங்கல்

நாகை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் செயல்படும் ஆயிரத்து 325 அங்கன்வாடி மையங்களில் 28 ஆயிரத்து 109 குழந்தைகளுக்கும், மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்படும் ஆயிரத்து 162 சத்துணவு மையங்களில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 45 மாணவ, மாணவிகளுக்கும் பலவகை கலவை சாதங்கள் வழங்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பள்ளியில் மதிய உணவாக மாணவ, மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கலும், அங்கன்வாடி குழந்தைகளுக்கு தக்காளி சாதத்துடன் முட்டை மற்றும் சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை கலெக்டர் முனுசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சிவஞானபாரதி, நகரசபை தலைவர் மஞ்சுளா சந்திரமோகன், நகராட்சி ஆணையர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.