Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
நாகை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 8½ கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதிகாரிகள் கண்காணிப்பு
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி செல்லப்படுவதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து அதிகாரிகள் தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று மதியம் அதிகாரிகள் மேலசாலை பகுதியில் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வேகமாக வந்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். மேலும் காரில் இருந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
பறிமுதல்
விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அதிகாரிகளுக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. எனவே அதிகாரிகள் காரில் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது காரின் கியர் பாக்ஸ் அடியில் 19 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தங்க கட்டிகளை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவற்றை காரில் இருந்து வெளியே எடுத்து ஆய்வு செய்தனர்.
தங்க கட்டிகளின் மொத்த எடை 8 கிலோ 536 கிராம் என தெரியவந்தது. இதன்மதிப்பு சுமார் ரூ.2 கோடியே 30 லட்சம் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தங்க கட்டிகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கைது
இதைத்தொடர்ந்து காரில் இருந்த 2 பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த முகமது பாசில் (வயது 25) மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த யாசர் அராபத் (20) என்பதும் தெரியவந்தது.
முகமது பாசில், யாசர் அராபத் ஆகிய இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டதா? அல்லது வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டதா? இந்த கடத்தலில் மேலும் யாரும் சம்பந்தப்பட்டுள்ளனரா? என பிடிபட்ட 2 பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: