Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவல் இல்லை என்று மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஐ.ஜி. விஷ்ணுராவ் தெரிவித்தார்.

நிறைவு விழா

கோவை அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு 166 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஐ.ஜி. விஷ்ணுராவ் கோவை வந்தார்.

பின்னர் கதிர்நாயக்கன்பாளையம் சென்ற அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினார்கள். அதை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீவிர கண்காணிப்பு

மத்திய அரசும், மத்திய ரிசர்வ் படை போலீசாரும் இணைந்து நக்சலைட்டுகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அத்துடன் ஏற்கனவே உள்ள நக்சலைட்டுகளின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தற்போது உள்ள நக்சலைட்டுகளின் 80 சதவீதம் பேர் குறித்த அனைத்து விவரங்களும் எங்களிடம் உள்ளன. 20 சதவீதம் பேர் குறித்த தகவல் மட்டுமே இல்லை. இதற்கு காரணம் அவர்கள் மக்களுடன் மக்களாக வாழ்ந்து வருகிறார்கள். பகல் நேரத்தில் டாக்டர்களாக, என்ஜினீயர்களாக மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவியில் உள்ளனர். ஆனால் இரவில் தீவிரவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வழிகள் தடுக்கப்படும்

எனவே அவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் நக்சலைட்டுகள் அதிகம் உள்ள பகுதிகளில் மாறுவேடத்தில் சென்று கண்காணித்து வருகிறார்கள். நக்சலைட்டுகளை கொல்வது எங்கள் நோக்கம் இல்லை. அவர்கள் திருந்தி வாழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் ஆகும்.

வெளிநாடுகளில் இருந்து நக்சலைட்டுகளுக்கு ஆயுதங்கள் கிடைப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. அதுகுறித்து தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அது உண்மையாக இருந்தால் ஆயுதங்கள் வரும் வழிகள் தடுக்கப்படும்.

50 இடங்களில் பயிற்சி

பெரும்பாலும் வேலை இல்லாத இளைஞர்கள்தான் நக்சலைட்டுகளாக மாறி வருகிறார்கள். எனவே அவர்களை கண்டுபிடித்து, அவர்கள் தொழில் தொடங்க மத்திய அரசு மூலம் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் புதிதாக நக்சலைட்டுகள் உருவாகுவது தடுக்கப்பட்டு உள்ளது. எனவே நக்சலைட்டுகள் எண்ணிக்கை படிப்படியாக குறையும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மேலும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் உள்ளவர்களுக்கு அதிநவீன துப்பாக்கிகளை பயன்படுத்துவது, நக்சலைட்டுகளை ஒழிப்பது, கலவரங்களை தடுப்பது, கண்ணிவெடிகளை அகற்றுவது என்பது உள்பட பல்வேறு பயிற்சிகள் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்து வருகிறது.

இவ்வாறு ஐ.ஜி. விஷ்ணுராவ் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஊடுருவல் இல்லை

தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவல் உள்ளதா என்று கேட்டபோது, ‘தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவல் இல்லை. இங்கு நக்சலைட்டுகள் இருக்கிறார்கள் என்று தமிழக காவல்துறை சார்பில் எங்களுக்கு தகவலும் கொடுக்கவில்லை. தமிழக போலீசார் சிறப்பாக கண்காணித்து வருகிறார்கள்’ என்றார்.

பேட்டியின்போது அவருடன் பயிற்சி பள்ளி முதல்வரும் டி.ஐ.ஜி.யுமான ஜேக்கப் உடன் இருந்தார். இந்த பள்ளியில் சிறப்பாக பயிற்சி பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

0 comments: