Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
சபரிமலை அய்யப்பன் கோவிலில் செறுவள்ளி நாராயணன் நம்பூதிரி தலைமையில் நடத்தப்பட்ட அஷ்ட மங்கல்ய தேவ பிரசன்ன உத்தரவு படியான பரிகார பூஜைகள் நேற்று திருவனந்தபுரம் பத்ம நாப சாமி கோவிலில் தொடங்கியது.
அருள் வாக்கு கேட்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடத்தப்பட வேண்டிய அபிவிருத்தி பணிகள், கட்டுமான பணிகள் தொடர்பாக செறுவள்ளி நாராயணன் நம்பூதிரி தலைமையில் கடந்த ஜூன் 18– ந் தேதி முதல் 3 தினங்கள் சபரிமலை சன்னிதானத்தில் தேவபிரசன்னம் (தெய்வ அருள் வாக்கு கேட்டல்) பார்க்கப்பட்டது. அப்போது கேரளாவில் உள்ள பிரபல கோவில்களில் பரிகார பூஜைகள் நடத்த அருள் வாக்கு கூறப்பட்டது.
பரிகார பூஜை
அதன் படி நேற்று பரிகார பூஜைகள் தொடங்கியது. திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலில் காலை 9.30 மணியளவில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் எம்.பி.கோவிந்தன் நாயர் தலைமையில், முதலில் அக்ரக சாலை கணபதி கோவிலுக்கு சென்று தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சநேய சாமியின் ஆசிர் வாதத்துடன், நாலம்பலகத்தினுள் சென்று, நரசிங்க சாமியை வழிபாடு நடத்திய பின், பத்மநாபனுக்கு துளசி மாலை சாத்தி, பால் பாயாசம் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்பலத்தை சுற்றி வலமாக வந்து கிருஷ்ண பகவானை தொழுது வணங்கி வழிபாடு நடத்திய பின், தர்ம சாஸ்தா கோவிலுக்கு சென்று, நீராஞ்சனம் வழிபாடு நடத்தப்பட்டது. பரிகார பூஜையின் போது பத்மநாபனுக்கு பால்பாயாசம் படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நரசிங்க மூர்த்திக்கு புஷ்பாஞ்சலியும், கணபதிக்கு ஹோமமும் நடத்தப்பட்டது. ஆஞ்சநேய சாமிக்கு வெண்ணை முழுக்காப்பும், தர்ம சாஸ்தாவிற்கு நீராஞ்சனம் வழிபாடுகளும் நடத்தப்பட்டது.
திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் எம்.பி.கோவிந்தன் நாயர் தலைமையில் உறுப்பினர்கள் சுபாஷ் வாசு, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பி.கெ. குமாரன், கமிஷனர் வேணுகோபால் ஐ.ஏ.எஸ், தலைமை பொறியாளர் ஜோலி உல்லாஸ், சபரிமலை செயல் அதிகாரி ஜெயகுமார், பத்மநாபசாமி கோவில் செயல் அலுவலர் கெ.என். சதீஷ், பாதுகாப்பு அதிகாரி ஜெ. சுகுமாரபிள்ளை, சபரிமலை முன்னாள் மேல் சாந்தியும், பத்மநாபசாமிகோவில் சாந்தியுமான கோசால விஷ்ணுவாசுதேவன் நம்பூதிரி, ஆகியோர் சிறப்பு பரிகார பூஜை வழிபாடுகளை நடத்தி வழிபட்டனர்.
மேலும் 15 கோவில்களில்
பரிகார பூஜையின் தொடர்ச்சியாக, திருவிதாங்கூர் தேவசம்போர்டு கிழ் செயல்படும் 10 கோவில்களிலும் மேலும் 5 கோவில்களிலும் பரிகார பூஜைகள் தொடர்ந்து நடைபெறும் என்று சபரிமலை அய்யப்பன் கோவில் மக்கள் தொடர்பு அதிகாரி முரளி கோட்டைக்ககம் தெரிவித்தார்.
நடை திறப்பு
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. 21– ந் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். இந்நாட்களில் வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, நெய்யபிஷேகம், களபாபிஷேகம், உட்பட பூஜைகள் நடைபெறும்.

0 comments: