Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
பக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் கணவரை மீட்டு தர வேண்டும் என்று கோரி மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜிடம் ஒரு பெண் மனு கொடுத்தார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது உடுமலையை அடுத்த போடிபட்டி பகுதியை சேர்ந்த அம்பிகாவதி என்பவர் பக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தனது கணவரை மீட்க கோரி மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
நான் உடுமலையை அடுத்த போடிபட்டி பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் சத்தியநாராயணன். எங்களுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் இருக்கிறார்கள். எனது கணவர் கடந்த 1–11–2010–ந்தேதி பக்ரைன் நாட்டில் உள்ள தனியார் கணினி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில், மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலைக்காக சேர்ந்தார்.
கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பந்தம் முடிவடைந்ததை தொடர்ந்து எனது கணவர் இந்தியாவுக்கு திரும்பி வர தயாரான சமயத்தில், அவர் வேலை பார்த்த நிறுவனம் எனது கணவரின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை திரும்ப கொடுக்காமல் முடக்கி வைத்து மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதற்காக பல ஆதாரமற்ற பொய்யான காரணங்களையும் கூறி வருகின்றனர்.
இதை தொடர்ந்து பக்ரைனில் சிக்கிதவிக்கும் எனது கணவரை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வர எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் விளைவாக, எனது கணவர் வேலை பார்த்த அந்த நிறுவனம் பழைய பாஸ்போர்ட்டை முடக்கி விட்டு புதிய பாஸ்போர்ட் ஒன்றை கொடுத்துள்ளது. ஆனால் விசா திரும்ப கிடைக்காததால் இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.
மேலும் பல பொய்யான வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளதால் அந்த நாட்டு சட்டத்தின்படி அவர் கைது செய்யப்படும் நிலைக்கும் தள்ளப்பட்டு உள்ளார். தூதரகத்தை தொடர்பு கொண்டு இது குறித்து முறைபடி தகவல் தெரிவித்த பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எனது கணவரை இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய–மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

0 comments: