Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
பொதுமக்கள் உணவாக பயன்படுத்தாமல் தென்னை மரங்களுக்கு உரமாக மாறுவது சங்காயம் எனப்படும் மீன்கள்தான்.

சங்காயம் மீன்கள்

ராமேசுவரம், பாம்பன் பகுதியில் மீனவர்களின் வலையில் சிக்கும் பலவகையான மீன்கள் உணவுப்பொருளாக உள்நாட்டில் பயன்படுத்தப்படுவதுடன் ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் மீனவர்கள் பிடித்து வரும் சங்காயம் என்ற பெயருடைய சிறிய வகை மீன்கள் உணவாக பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக இவை கோழித் தீவனமாகவும், தென்னை மரங்களுக்கு உரமாகவும் பயன்படுத்தப்படுவதுடன், இதற்காகவே ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் பாம்பனில் இருந்து நேற்று முன்தினம் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் அனைவரும் நேற்று காலை மீன்களுடன் கரை திரும்பினர். அவர்களில் ஒரு சிலரின் படகுகளில் சுமார் 500 கிலோ முதல் 1 டன் வரை சங்காயம் மீன்கள் சிக்கியிருந்தன.

இந்த மீன்கள் முழுவதும் கடற்கரையிலேயே உலர வைக்கப்பட்டன. இந்த பணியில் மீனவர்களும், மீனவ பெண்களும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

தென்னை மரங்களின் உரம்

சங்காயம் மீன்கள் அதிக அளவில் கிடைத்தது குறித்து பாம்பனை சேர்ந்த மீன் வியாபாரி ஸ்டீபன் என்பவர் கூறியதாவது:-

விசைப்படகு மீனவர்கள் பிடித்து வரும் சங்காயம் மீன்களை மொத்த விலைக்கு வாங்குவோம். பின்னர் அவற்றை கடற்கரையிலேயே உலர வைத்து லாரி, வேன் மூலம் நாமக்கல், சேலம் போன்ற இடங்களுக்கு கோழித் தீவனத்திற்கு அனுப்பி வைப்போம். அத்துடன் தென்னை மரங்களுக்கு உரமாகவும் சங்காயம் மீன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இவை கேரள மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படும்.

இந்த மீன்களை உப்புடன் சேர்த்து தென்னை மரத்தின் அடிப்பகுதியில் குழி தோண்டி புதைத்து வைத்தால் மரம் நன்றாக வளர்ச்சி அடைவதுடன், விளைச்சலும் அதிகமாக இருக்கும். இதனால் தமிழகத்தில் ஏராளமான ஊர்களுக்கு சங்காயம் மீன்கள் இங்கிருந்து அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த மீன் உலர்த்தப்பட்ட நிலையில் 1 கிலோ ரூ.32 முதல் ரூ.35 வரை விலை போகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான தென்னை மரங்களுக்கும் இந்த மீன்கள் உரமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

0 comments: