Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்தன. அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சில இடங்களில் அ.தி.மு.க.–தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அண்ணா சிலை அருகே அ.தி.மு.க.வினர் நகர செயலாளர் காமராஜ், ஒன்றிய செயலாளர் சின்னப்பன், அ.தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் சிவக்குமார், நகர்மன்ற தலைவர் கலாவதி ஞானசேகர், தொகுதி செயலாளர் கோவிந்தராஜ், வர்த்தக கழக தலைவர் ஞானசேகர் ஆகியோர் தலைமையில் திரண்டனர்.
அங்கு அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அவர்கள் தாராபுரத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த கடைகளை மூடும்படி வலியுறுத்தினர். இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
அண்ணாசிலை அருகே தி.மு.க நகர அலுவலகம் உள்ளது. அங்கே சென்ற அ.தி.மு.க.வினர் அலு வலகத்தை மூடும் படி கூறினார்கள். இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்களுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் தி.மு.க. அலுவலகம் முன் வைக்கப் பட்டிருந்த கருணாநிதி, மு.க.ஸ்டாலின் பிளக்ஸ் போர்டுகளுக்கு தீ வைத்தனர். கருணாநிதியின் உருவ பொம்மையையும் எரித்தனர்.
தாராபுரம் ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் சன் பாலுவுக்கு சொந்தமான பழைய வாகனங்கள் விற்பனை நிலையம் அருகே வந்த அ.தி.மு.க.வினர் கடையை உடனே மூடுமாறு கூறினார்கள்.
தகவல் அறிந்ததும் தி.மு.க. ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு வந்தனர். கடையை மூடச்சொல்லி வற்புறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.–தி.முக.வினரிடையே மோதல் உருவானது. இந்த களேபரத்தில் அந்த கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கும் தீ வைக்கபட்டது. காரில் இருந்த கியாஸ் சிலிண்டர் திறந்து விடப்பட்டதால் தீ மளமளவென பரவியது. அப்போது தி.மு.க.வினர் சிலர் உயிர் தப்புவதற்காக கடைக்குள் சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டு உயிர் பிழைத்தனர்.
காருக்கு தீவைக்கபட்ட தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். தீயணைப்பு வாகனத்தையும் அ.தி.மு.க.வினர் முன்னேறிச்செல்ல விடாமல் தடுத்தனர். தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி.இளங்கோவன், இன்ஸ் பெக்டர்கள் சிவக்குமார், பொம்மு மற்றும் போலீசார் விரைந்து வந்து லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
அதன் பின்னர் காரில் எரிந்து கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டது. அ.தி.மு.க. நிர்வாகியின் மோட்டார் சைக்கிளுக்கு வைக்கப்பட்ட தீயையும் அணைக்கப்பட்டது. அ.தி.மு.க.–தி.மு.க.வினரிடையே ஏற்பட்ட மோதலின் போது கடைக்குள் ஓடி பதுங்கிய சிலரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
அதன் பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார்சிங் தலைமையில் கொடி அணிவகுப்பு நடந்தது.
பல்லடம் கல்லாம் பாளையத்தில் இன்று காலை பல்லடம் உழவர் பணி கூட்டுறவு சங்க தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் சரஸ்வதி, சித்ராதேவி, நகர அவைத்தலைவர் தங்கவேல் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டனர்.
அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கொடும் பாவியை எரித்தனர்.
அவினாசியிலும் அ.தி.மு.க.வினர் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். சேவூர் கைகாட்டி அருகே தொகுதி செயலாளர் சேவூர் வேலுசாமி தலைமையில் கருணாநிதியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
கருவலூரில் ஊராட்சி செயலாளர் காத்தவராயன் தலைமையில் சாலை மறியல் நடந்தது.
அம்மாபாளையத்தில் கருணாநிதி உருவபொம்மை எரிக்கப்பட்டது. அம்மா பாளையத்திலும், அவினாசி புதிய பஸ் நிலையம் அருகேயும் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

0 comments: