Tuesday, September 16, 2014

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் 28வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற இருப்பதை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி திங்களன்று திருப்பூரில் மக்களுக்கான மருத்துவம் என்ற சிறப்புக் கருத்தரங்கில் அகில இந்தியச் செயலாளர் ஆர்.ரமேஷ்சுந்தர் சிறப்புரை ஆற்றுகிறார். உடன் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.சுரேஷ்பாபு, சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் ஆகியோர் உள்ளனர்.

இந்த கருத்தரங்கில் பங்கேற்ற ஒரு பகுதியினர்.

இக்கருத்தரங்கின்போது வெண்மணித் தியாகிகள் நினைவாலயத்திற்காக மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் சார்பில் ரூ.5 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.
​-------------------
மருந்துத்துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை
பாரதிய ஜனதா அரசு முழுமையாக வரவேற்கிறது

மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சாடல்!
 திருப்பூர், செப்.16-
இந்தியாவின் மருந்து உற்பத்தித் துறையில் மிகச்சிறப்பாக செயல்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை சீர்குலையச் செய்து, பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை முழுமையாக வரவேற்கக்கூடியதாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு செயல்படுகிறது என்று அகில இந்திய மருந்து விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பின் செயலாளர் ஆர்.ரமேஷ்சுந்தர் குற்றம்சாட்டினார்.
​திருப்பூரில் திங்களன்று தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற "மக்களுக்கான மருத்துவம்" என்ற சிறப்புக் கருத்தரங்கில் பங்கேற்ற ஆர்.ரமேஷ்சுந்தர் தமது உரையில் கூறியதாவது:
​மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பது மருத்துவம். இந்த மருத்துவத் துறைக்கு தேவையானது மருந்துகள். ஆனால் மருத்துவத்திற்கென தனியாக சுகாதாரத் துறை அமைச்சகம் வைத்திருக்கும் மத்திய அரசு, மருந்துகளை அந்த துறை வசம் ஒப்படைக்காமல் பெட்ரோ கெமிக்கல்ஸ் எனப்படும் தனித்துறை வசம் பிரித்து வைத்திருக்கிறது. இதில் இருந்தே மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனை, தனியார் லாபத்திற்கான துறையாக பார்க்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
மருந்து தயாரிக்கும் நாடுகளில் இந்தியா உயர்ந்த நிலையில் இருக்கிறது என்பது பெருமைக்குரியது. நம் நாட்டில் மொத்த மருந்து உற்பத்தி ஆண்டுக்கு ரூ.1லட்சம் கோடியை எட்டிவிட்டது. உலக அளவில் இந்தியாவில் தான் மருந்து விலை குறைவாக இருக்கிறது. அதேசமயம், அந்த மருந்துகளின் உற்பத்திச் செலவை ஒப்பிட்டால் 300 முதல் 400 சதவிகிதம் விலை அதிகமாக இருக்கிறது.
உலக அளவில் ராணுவ தளவாட உற்பத்திக்கு அடுத்தபடியாக அதிக அளவு முதலீடும், லாபமும் ஈட்டக்கூடிய துறையாக மருந்துத்துறை இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவின் மருந்துத்துறை சுயசார்புடையதாக இருந்தது. ஆனால் 1991ல் தொடங்கப்பட்ட தாராளமய கொள்கை அமலாக்கத்தின் மூன்றாவது தலைமுறை சீர்திருத்தம் வந்த பிறகு நமது சுயசார்புத் தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் 90 சதவிகிதத்திற்கு மேலான மருந்துகளின் மூலப்பொருட்கள் மேலை நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகளாக தயாரிக்கப்படுகின்றன.
இதனால் 1956ல் ஏற்படுத்தப்பட்ட தொழில் கொள்கையின் மூலம், பொதுத்துறை பலப்படுத்தப்பட்டு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டது தற்போது சீரழிக்கப்பட்டுவிட்டது. பொதுத்துறை மருந்து தயாரிப்பில் ஈடுபடுவதற்கு முன்பு வெளிநாட்டு நிறுவனங்கள்தான் மருந்து தயாரிப்பில் ஈடுபட்டன. பொதுத்துறை நிறுவனங்கள் வந்தபிறகு சந்தையில் 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட டெட்ரா மைஸின் 10 பைசாவுக்கு கிடைத்தது. அதேபோல் 6 ரூபாய்க்கு விற்கப்பட்ட மாத்திரை 60 பைசாவுக்குக் கிடைத்தது. பொதுத்துறை நிறுவனமும் லாபத்தை வைத்துத்தான் மருந்து விற்பனை செய்தது. அப்படியானால் தனியார் முதலாளிகள் மருந்துத்துறையில் ஈட்டிய லாபம் எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதை அறியலாம்.
1970ல் இந்திய மருந்துச் சட்டம், புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் மூலப்பொருளுக்கு பதிலாக மருந்து செயல்முறைக்கு காப்புரிமை (பிராஸஸ் பேட்டன்) வழங்கியது. இதனால் ஒரே மருந்தை பல நிறுவனங்கள் வெவ்வேறு விதத்தில் தயாரித்து சந்தையில் விற்பனை செய்தன. எனவே போட்டி காரணமாக மருந்து விலை கட்டுப்படுத்தப்பட்டது. ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்ட மருந்து ரூ.2க்குக் குறைந்தது.
இன்றைக்கு அறிவுச்சொத்துடைமை காப்புரிமை சட்டத்தின் மூலம்தான் இந்திய மருந்துத் துறைக்கு மிகப்பெரும் ஆபத்து வரப்போகிறது. போலியோ மருந்து கண்டுபிடித்த அறிஞர் அதற்கு சொந்தமாக காப்புரிமை பெற மறுத்துவிட்டார். அதனால் போலியோ மருந்து உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு மலிவாகக் கிடைத்தது, பல கோடி குழந்தைகள் போலியோவில் இருந்து காப்பாற்றப்பட்டனர். ஆனால் இதற்கு காப்புரிமை பெறப்பட்டிருந்தால் ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனம் அதைப் பெற்று மிகப்பெரும் லாபம் ஈட்டக்கூடிய மருந்தாக மாற்றியிருப்பார்கள்.
இன்றைக்க காப்புரிமை சட்டத்தில் பல தில்லுமுல்லுகளைச் செய்து பன்னாட்டு நிறுவனங்கள் மருந்து உற்பத்தியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். புற்று நோய்க்கான மருந்து ரூ.5 ஆயிரம் மட்டுமே, அதே மருந்தை பன்னாட்டு நிறுவனம் உற்பத்திக்கான காப்புரிமை (ப்ராடக்ட் பேட்டன்) பெற்றுக் கொண்டு ரூ.1லட்சத்து 20 ஆயிரத்திற்கு விற்பனை செய்கின்றனர். உச்சநீதிமன்றம் இந்த விசயத்தில் நியாயமாக தீர்ப்பு வழங்கி புற்றுநோய் மருந்து ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனை செய்வதை உறுதிப்படுத்தியது. உடனடியாக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருப்பதால் வரமுடியாது என்று கூப்பாடு போட்டனர். அப்போதைய வர்த்தக அமைச்சர் ஆனந்த்சர்மா பன்னாட்டு நிறுவனத்திடம் மன்னிப்பே கேட்டார்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், இப்போதைய பாரதிய ஜனதா அரசும் பொதுத்துறை மருந்து தயாரிப்பு நிறுவனங்களை முழுமையாகக் கைவிட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை முழுமையாக வரவேற்கக்கூடியவையாக இருக்கின்றன. மருந்து தயாரிப்பில் சிறப்பாகச் செயல்பட்ட ஐடிபிஎல் எனப்படும் பொதுத்துறை நிறுவனத்தின் உற்பத்தி மொத்தமாக நிறுத்தப்பட்டுவிட்டது. உலகத்தரம் வாய்ந்த தடுப்பூசிகள் தயாரித்த பொதுத்துறை நிறுவனங்களை நலிவடையச் செய்து மத்திய அரசு கைவிட்டுவிட்டது.
தொற்று நோய்களைத் தடுக்கும் மருந்துகள் சிறப்பாக உற்பத்தி செய்து மக்களின் உயிரைக் காப்பாற்றியதில் பொதுத்துறை மருந்து நிறுவனங்களின் பங்கு சிறப்பானது. அதை அப்படியை மத்திய அரசுகள் கைவிட்டு விட்டன.
அதேபோல் மருந்துகளின் விலைக்கட்டுப்பாட்டு கொள்கையையும் அரசுகள் கைவிட்டுவிட்டன. ஆயிரக்கணக்கான மருந்துகளில் வெறும் 354 மருந்துகள மட்டுமே விலைக்கட்டுப்பாட்டு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. மொத்த உற்பத்தி மதிப்பை ஒப்பிடும்போது வெறும் 2 சதவிகித மருந்துகள் மட்டுமே விலை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. விலைக்கட்டுப்பாட்டை முற்றிலும் விலக்கிக் கொள்ளும் மோசடி தற்போது நடைபெற்று வருகிறது. மருந்துகளின் பிராண்ட் பெயர்களை வைத்து விற்பனை செய்வதற்கு மாறாக, அவற்றின் மூலப்பொருளை கொண்டு விற்பனை செய்ய வேண்டும் என்று கூறுவதும் ஒருவகையில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிதான்.
எனவே மருந்துத்துறை பற்றி பொது மக்களுக்கு மிகப்பெருமளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பசி, பிணி, பகை இல்லாத நாட்டைப் படைக்க நாம் பாடுபட வேண்டும்.
இவ்வாறு  ஆர்.ரமேஷ்சுந்தர் பேசினார்.
திருச்சியில் இம்மாதம் கடைசி வாரத்தில் நடைபெறவுள்ள மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் மாநில மாநாட்டை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கிற்கு மாவட்டத் தலைவர் வி.சுரேஷ்பாபு தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் வி.ராஜாராம் வரவேற்றார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்த நிகழ்ச்சியில் வெண்மணி நினைவாலயத்திற்கு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் சார்பில் ரூ.5 ஆயிரம் நிதியை சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சந்திரனிடம் வழங்கினர்.
ஏராளமான மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.செந்தில்குமார் நன்றி கூறினார்.




0 comments: