Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by farook press in ,    
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கண்டிப்புதூர் காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் காளியப்பன். அவருடைய மகன் கே.ராம்கி (வயது 25). பி.பி.ஏ. பட்டதாரி. பள்ளிபாளையத்தில் உள்ள ஒரு விசைத்தறிக்கூடத்தில் மேலாளராக உள்ளார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. அவருடைய மகள் கே.தங்க சிவசங்கரி (24). பி.காம் பட்டதாரி.
இவர்கள் 2 பேரும் அங்குள்ள தனியார் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றினர். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்தப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.இதற்கிடையே ராம்கி அங்குள்ள விசைத்தறிக்கூடத்தில் மேலாளராக வேலைக்கு சேர்ந்தார். ஆனாலும் 2 பேரும் செல்போன் மூலம் தங்கள் காதலை தொடர்ந்து வளர்த்துக்கொண்டனர். இந்த நிலையில் 2 பேரின் காதலும் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து 2 பேரின் குடும்பத்தினரும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 2 பேருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென்று சிவசங்கரியின் பெற்றோர் திருமணம் நடைபெறுவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சிவசங்கரியை பள்ளிபாளையத்தில் இருந்து பெங்களூர் மற்றும் கரூரில் உள்ள அவர்களுடைய உறவினர்களின் வீடுகளுக்கு அழைத்து சென்றனர்.இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் பள்ளிபாளையத்துக்கு சிவசங்கரி வந்தார். பின்னர் ராம்கியும், சிவசங்கரியும் வீட்டை விட்டு வெளியேறி ஈரோட்டுக்கு வந்தனர். ஈரோடு தீயணைப்பு நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் ராம்கியும், சிவசங்கரியும் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா 2 பேரின் பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதேபோல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒக்கிலிப்பட்டியை சேர்ந்தவர் குப்புசாமி. அவருடைய மகன் குமார் என்ற கோபாலகிருஷ்ணன் (30). பி.ஏ. பட்டதாரி. இவர் பள்ளிபாளையத்தில் நூல் கோண் அட்டை தயாரிக்கும் கம்பெனி வைத்து உள்ளார். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள செங்காளிகாடு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். அவருடைய மகள் சோனியா என்ற நித்யா (26). எம்.பி.ஏ. பட்டதாரி.
திருச்செங்கோட்டில் உள்ள பள்ளியில் நித்யா படிக்கும்போது அவருக்கும், குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போன் மூலமும் தங்கள் காதலை வளர்த்துக்கொண்டனர்.
இவர்களுடைய காதல் 2 பேரின் பெற்றோருக்கும் தெரியவந்தது. ஆனால் சோனியாவின் பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று வீட்டை விட்டு வெளியேறிய குமாரும், சோனியாவும் திருமணம் செய்து கொண்டு ஈரோடு கருங்கல்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்களது திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.
பின்னர் 2 பேரும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா 2 பேரின் பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
--–

0 comments: