Wednesday, October 01, 2014

On Wednesday, October 01, 2014 by farook press in ,    
மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த பலத்த மழையால் கோவில் மண்டபம் இடிந்து விழுந்து பூசாரிகள் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், மேதர் பிள்ளையார் கோவில் தெருவில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, அதிகாலையில் எழுந்து பூஜை செய்வதற்காக இந்த கோவிலின் பூசாரிகள் பழனிசாமி, குமார், மணிகண்டன் மற்றும் கோத்தகிரி பண்ணாரி அம்மன் கோவில் பூசாரி சோமசுந்தரம் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கோவில் மண்டபத்திலேயே படுத்து தூங்கினர்.
இரவில் அந்த பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கோவிலில் நின்று கொண்டிருந்த பங்களா மேடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில் (வயது 35) மற்றும் அவருடைய நண்பர் பிரபாகரன் (27) ஆகியோரும் பூசாரிகளுடன் கோவில் மண்டபத்திலேயே தூங்கினார்கள்.

பலத்த மழை காரணமாக நள்ளிரவு 1 மணியளவில் கோவில் மண்டபம் அருகே இருந்த சாக்கு குடோன் சுவர் இடிந்து மண்டபம் மீது விழுந்தது. இதில் மண்டபத்தின் மேற்கூரை உடைந்து உள்ளே தூங்கிக் கொண்டு இருந்தவர்களின் மேல் விழுந்தது. இதனால் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த 6 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
வெளியே வரமுடியாததால் 6 பேரும் காப்பாற்றும்படி கூச்சல் போட்டனர். ஆனால் பலத்த மழையால் அவர்களது சத்தம் வெளியே கேட்கவில்லை.
நேற்று காலை 6 மணியளவில் அந்த வழியாக சென்றவர்கள் கோவில் மண்டபம் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.
போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து சென்று பொதுமக்களின் உதவியுடன் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில் பூசாரிகள் பழனிசாமி, குமார் மற்றும் பிரபாகரன் ஆகியோர் பரிதாபமாக பலியாகி இருந்தது தெரியவந்தது. போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லாரி டிரைவர் செந்தில் (35), பூசாரிகள் சோமசுந்தரம் (36), மணிகண்டன் (25) ஆகியோர் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிக்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: