Thursday, October 09, 2014

On Thursday, October 09, 2014 by Unknown in ,    
பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளை விற்க முயன்ற 3 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள ஒரு பழமையான கோவிலில் இருந்து சாமி சிலைகள் திருடு போய் இருந்தன. இது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சிலை விற்பனை தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள பொருளாதார மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரராஜன், இன்ஸ்பெக்டர்கள் ஜனார்த்தனன், ரவி, நடராஜன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக சிலை கடத்தல் கும்பலுடன் இடைத்தரகர்கள் போல் ஆன்லைன் வர்த்தக பேரத்தில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் ஐம்பொன்னால் ஆன 2½ உயர முருகன் சிலை, தலா 2 அடி வீதம் வள்ளி, தெய்வானை சிலைகளும், 24 செ.மீ. நீளம் உள்ள பாம்புடன் கூடிய மயில் சிலை, 3அடி உயர திருவாச்சி ஆகியவை இருப்பதாகவும் கூறி விலை பேசினர். முடிவில் இவை அனைத்தும் ரூ.18 கோடிக்கு தருவதாக ஒப்புக்கொண்டனர். இதற்கு முன்பணமாக ரூ.50 லட்சம் தருவதாக பேசி முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து மேலூர் அழகர்கோவில் ரோட்டில் உள்ள பல்லவ ராயன்பட்டி என்ற இடத்தில் காரில் வந்து நிற்பதாகவும் அங்கு வந்து தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார், கிராம நிர்வாக அதிகாரி கண்ணன், உதவியாளர் மூர்த்தி ஆகியோருடன் மாறுவேடத்தில் ஒரு காரில் சென்றனர்.
அங்கு தயாராக நின்று கொண்டிருந்தவர்களிடம் சிலைகளை விலைக்கு வாங்க வந்தவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். இதை நம்பிய அவர்கள் காரில் வைத்து இருந்த சாமி சிலைகளை காட்டினார்கள். உடனே போலீசார் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு சிலை கடத்தல் கும்பலை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அப்போது ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மற்ற 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்களது பெயர் மதுரை அம்பேத்கார் காலனியைச் சேர்ந்த ரமேஷ் மகன் தினேஷ் (வயது28), திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த பீர்முகம்மது மகன் அப்துல் அஜீஸ் (25), திருநெல்வேலி அருகே உள்ள தாழையூத்து சங்கர்நகர் முருகன் மகன் சிவா (வயது25) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரையும் கைது செய்து தொடர்ந்து போலீசார் விசாரித்தார்கள்.
இதில் தப்பி ஓடியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த பேச்சிக்குட்டி (25) என்பதும், சிலை கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவன் என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதையொட்டி சிலைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்களை மேலூர் போலீசாரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட முருகன் சிலை 18 கிலோவும், மற்ற சிலைகள் தலா 10 கிலோ வீதம் இருந்தன. இந்த சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

0 comments: