Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by farook press in ,    
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் முக்கடல் அணை 4 ஆண்டுகளுக்குப்பிறகு நிரம்பியுள்ளது. அதிகபட்சமாக அந்த அணைப்பகுதியில் 92 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிற்பகலில் நாகர்கோவில் நகரம் உள்பட மாவட்டத்தின் ஒரு பகுதியில் பலத்த மழை பெய்தது. அதேநேரத்தில் மாவட்டத்தின் மற்றொரு பகுதியில் வெயிலும், மழை பெய்வதற்கான அறிகுறியும் மட்டுமே காணப்பட்டன.இதுபோல் நாகர்கோவிலில் நேற்று காலையில் வழக்கம்போல் வெயில் இருந்தது. பிற்பகலில் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சி அளித்தது. சுமார் 2.45 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை நேற்று முன்தினம் பெய்த மழையைப்போல் பலமாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுமார் 10 நிமிடம் வரை மட்டுமே பெய்த சாரல் பின்னர் ஓய்ந்தது. எனவே நேற்றும் குமரி மாவட்டத்தில் சில இடங்களில் சாரல் மழை தொடர்ந்தது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டர்) வருமாறு:–பேச்சிப்பாறை– 4, பெருஞ்சாணி– 10.2, முக்கடல்– 92, இரணியல்–1, ஆணைக்கிடங்கு– 11, முள்ளங்கினாவிளை– 4, நாகர்கோவில்–34.4, பூதப்பாண்டி– 55.5, சுருளோடு– 52, கன்னிமார்– 61, ஆரல்வாய்மொழி– 18.6, பாலமோர்– 2.8, மயிலாடி– 17.6 என்ற அளவில் பெய்திருந்தது. இதில் அதிகபட்சமாக முக்கடல் பகுதியில் 92 மி.மீ. அளவு மழை பதிவாகியிருந்தது.நாகர்கோவில் பகுதிக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நேற்று முன்தினம் 24.15 அடியாக இருந்தது. அது நேற்று 25½ அடியாக உயர்ந்தது. 2010–ம் ஆண்டு வரை 25 அடி கொள்ளளவு கொண்டதாக முக்கடல் அணை இருந்தது. அந்த ஆண்டில் அணையின் ஷட்டர் பழுதடைந்ததின் காரணமாக சீரமைப்பு பணி நடந்தபோது ஒரு அடிக்கு சுவர் எழுப்பப்பட்டது. இதனால் தற்போது இந்த அணை 26 அடி கொள்ளளவு கொண்டதாக அமைந்துள்ளது என்றும், எனவே 26 அடிக்குப்பிறகுதான் உபரி நீர் மறுகால் வழியாக வெளியேறும் என்றும் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தெரிவித்தார்.
முக்கடல் அணை கடந்த 2009–ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் முழு கொள்ளளவான 25 அடி கொள்ளளவை எட்டியிருந்தது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் இந்த அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments: