Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by farook press in ,    
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், போக்குவரத்துக்கு இடையூறு இன்றி இருசக்கர வாகனங்களை நிறுத்த உத்தரவிட்டார். இந்த உத்தரவை அதிகாரிகள் உடனடியாக நிறைவேற்றினர்.
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நடந்த வாக்காளர் சேர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை தொடங்கி வைப்பதற்காக கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நேற்று காலை வந்தார். நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்னர், அந்த பஸ் நிலையம் முழுவதையும் அதிகாரிகளுடன் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக வைக்கப்பட்டிருந்த சுத்திகரிப்பு எந்திரத்துடன் கூடிய குடிநீர் தொட்டி பழுதடைந்திருப்பதையும், குடிநீர் குழாய் சேதம் அடைந்து இருப்பதையும் பார்த்து அவற்றை உடனடியாக சரிசெய்து, பயணிகளுக்கு தரமான குடிநீர் வசதியை செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுரேஷ்குமாருக்கு உத்தரவிட்டார்.பின்னர் அங்குள்ள கட்டண கழிவறைக்கு சென்றார். அந்த கழிவறையின் ஒரு பகுதியில் ஒட்டி வைக்கப்பட்டிருந்த கட்டண விவரத்தை, கட்டணம் வசூலிக்கும் இடத்தில் பெரிய எழுத்துக்களில் ஒட்டி வைக்க வேண்டும் என்று காசு வசூலிப்பவர்களிடம் அறிவுறுத்தினார். பின்னர் கழிவறைக்கு சென்று வந்தவர்களிடம் எவ்வளவு காசு வசூலித்தார்கள்? என்று விவரம் கேட்டறிந்தார். பின்னர் கழிவறைக்குள் சென்று கழிவறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். மேலும் கழிவறைக்கு வெளிப்பகுதியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த மண்குவியலை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.
அதன்பிறகு பஸ் நிலையத்தின் கீழ் பகுதியில் குப்பைக்கூளங்கள் தேங்காமல் சுகாதாரமாக வைக்க நகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து பஸ் நிலையத்துக்குள் நகராட்சி கடைகள் அமைந்துள்ள கட்டிடத்தை ஆய்வு செய்தார். அப்போது சில கடைக்காரர்கள் கடைக்கு முன்பகுதியில் ஆக்கிரமித்து பொருட்களை வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. அவற்றை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.பஸ் நிலையத்தின் வெளிப்பகுதியில் ஒரு வணிக வளாகத்தின் முன்பும், அங்குள்ள ரோட்டோரத்திலும் போக்குவரத்துக்கு இடையூறாக பஸ் நிலையத்துக்கு வருபவர்கள் மற்றும் பயணிகள் இருசக்கர வாகனங்கள் நிறுத்தியிருப்பதை பார்த்தார். அந்த வாகனங்களை பஸ் நிலைய வளாகத்துக்குள்ளேயே, அதாவது பஸ் நிலைய வாயிலின் வெளியே ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு இருக்கும் பகுதியின் அருகில் தரை ஓடுகள் பதிக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்தவும், தற்போது இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில் “நோ பார்க்கிங்’’ அறிவிப்பு பலகை வைக்கவும் போலீசாருக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். இதனை உடனடியாக நிறைவேற்றும்படியும் கூறினார். மேலும் பஸ் நிலையத்துக்கு வெளியே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை நோக்கியபடி வளர்ந்திருந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கலெக்டரின் இந்த உத்தரவை உடனடியாக நிறைவேற்றும் விதமாக போலீசாரும், நகராட்சி அதிகாரிகளும், பஸ் நிலையத்துக்கு வெளியே ரோட்டோரமாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் அனைத்தையும் நேற்று மதியத்தில் இருந்து பஸ் நிலையத்துக்குள் கலெக்டர் குறிப்பிட்ட இடத்தில் மாற்றி நிறுத்தச் செய்தனர். அதன்பிறகு பஸ் நிலையத்துக்கு வெளியே உள்ள சாலையில் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இடையூறு எதுவுமின்றி சீராக சென்று வந்தன.
பஸ் நிலையங்களில் கலெக்டர் திடீர், திடீரென ஆய்வு நடத்தி பயணிகளுக்கு பயனுள்ள வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

0 comments: