Thursday, October 09, 2014

On Thursday, October 09, 2014 by Unknown in ,    
நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகா, அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் பால்பழம் என்ற பழம் (வயது 37). கடந்த 13.10.2000 அன்று அதேபகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த 16 வயது சிறுமியை கற்பழித்ததாக அவர் மீது பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நெல்லை மகளிர் கோர்ட்டு, பால்பழத்துக்கு அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த குற்றச்சாட்டுக்காக 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், கற்பழிப்பு குற்றச்சாட்டுக்காக 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டு 2 தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க 8.2.2006 அன்று உத்தரவிட்டது. மேலும், அந்த 2 குற்றச்சாட்டுகளுக்காகவும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து பால்பழம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.ஆர்.சிவக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் வி.கதிர்வேல், வக்கீல் பிரபு ஆகியோர் ஆஜராகி வாதாடினர். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:
மனுதாரர் வீட்டுக்குள் நுழைந்து சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற போது சிறுமி சத்தமிட்டதால் மனுதாரர் தனது சட்டையை கழற்றி சிறுமியின் வாயில் வைத்து அமுக்கி கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த சட்டையை போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஆனால், அந்த சட்டை அவர் அணிந்து இருந்தது தானா? என்பதை நிரூபிக்க அந்த சட்டையின் காலரில் இருந்த டெய்லரிடம் விசாரணை நடத்தவில்லை. மருத்துவ அறிக்கையில் கற்பழிப்பு நடந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று சம்பவத்தின் போது அந்த சிறுமி அணிந்து இருந்த ஆடையும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த மருத்துவ அறிக்கையிலும், கற்பழிப்பு சம்பவம் நடந்ததற்கான அறிகுறி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது கற்பழிப்பு புகார் கூறி உள்ள சிறுமியின் சகோதரியும் அவரது அருகில் படுத்து தூங்கி உள்ளார்.
அவர்கள் 2 பேரின் சாட்சியங்களிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. போலீசாரின் விசாரணையிலும் பல குறைபாடுகள் உள்ளன. இதையெல்லாம் கீழ் கோர்ட்டு கருத்தில் கொள்ளவில்லை. எனவே, மனுதாரருக்கு விதிக்கப்பட்ட ஜெயில் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. கீழ் கோர்ட்டு உத்தரவுப்படி மனுதாரர் அபராதம் செலுத்தி இருந்தால் அந்த தொகையை அவருக்கு திரும்ப வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது

0 comments: