Wednesday, October 15, 2014

On Wednesday, October 15, 2014 by Unknown in ,    
மங்கள்யான் விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து கொண்டுள்ளது. இந்த விண்கலத்தை அனுப்புவதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றினார்கள். இந்த விண்கலம் அனுப்புவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஜெயச்சந்திரன், பால்பாண்டி ஆகியோர் மதுரையில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விளக்க மளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:–
மங்கள்யான் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு உலகளவில் இந்தியா குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த விண்கலத்தை அனுப்புவதற்காக இஸ்ரோவில் பணியாற்றும் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் பாடுபட்டுள்ளனர். அடுத்ததாக சந்திரயான்2 விண்கலம் அனுப்புவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த விண்கலம் சந்திரனில் இறங்கும் படி வடிவமைக்கப்படுகிறது. சூரியனைப்பற்றிய ஆய்வுக்காக ஆதித்யா என்ற திட்டமும் உள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினர் தகவல் தொழில்நுட்பத்துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் நிறைய இளைஞர்கள் இந்த துறையை போட்டி போட்டு தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் மங்கள்யான் போல பல்வேறு விண்கலங்களை அனுப்புவதற்கு நமக்கு நிறைய விஞ்ஞானிகள் தேவைப்படுகின்றனர். அதாவது, இந்தத் துறையில் ஆராய்ச்சி செய்வதற்கான ஆர்வம் இளைஞர்களிடம் வளர வேண்டும். அதன் மூலம் உலகம் நமது நாட்டை திரும்பிப் பார்க்க வேண்டும்.
தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகில் இந்தியா தனி முத்திரை பதிக்க இளைஞர்கள் விண்வெளி ஆராய்ச்சித்துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

0 comments: