Sunday, October 26, 2014

On Sunday, October 26, 2014 by farook press in ,    

திருப்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சனியன்று திருப்பூர் நகரின் மையத்தில் செல்லக்கூடிய ஜம்மனை ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம். Sathyanagar Bridge KT MLA DRO Visit: திருப்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஜம்மனை ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நிலைமையை பார்வையிடும் திருப்பூர் தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ., கே.தங்கவேல், மாவட்ட வருவாய் அலுவலர் த.பாரிவேல் உள்ளிட்டோர். KT MLA: திருப்பூரில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து காயிதே மில்லத் நகர், சத்யாநகர் விரிவு பகுதி பொது மக்களிடம் கருத்துக் கேட்கிறார் கே.தங்கவேல் எம்.எல்.ஏ.,
திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஜம்மனை ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., கே.தங்கவேல் நேரில் சந்தித்ததுடன், அரசு அதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
திருப்பூர் நகரின் தெற்குப் பகுதியில் மக்கள் பெருக்கும் மிகுந்த பகுதிகளின் ஊடாக ஜம்மனை ஓடை செல்கிறது. கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி இரவு இந்த ஓடையில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருப்பூரில் மிகப்பெரும் நாசம் ஏற்பட்டது. அப்போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 9 பேர் உயிரிழந்தனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள் சேதம் ஏற்பட்டது.
சுமார் மூன்றாண்டுகள் ஆன நிலையில் தற்போது மீண்டும் இந்த ஜம்மனை ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் அரசு நிர்வாகம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை வெள்ளத் தடுப்பு பணிகள் காரணமாகவும், சில இடங்களில் பாலங்கள் உயர்த்திக் கட்டப்பட்டதாலும் தற்போது பாதிப்புகள் ஏற்படவில்லை.
வெள்ளியன்று இரவு தொடர் மழை காரணமாகவும், திருப்பூரின் மேற்கு பகுதியில் உள்ள பல்லடம், பொங்கலூர் வட்டாரங்களில் குளம், குட்டைகள் நிரம்பி வருவதன் காரணமாகவும் ஜம்மனை ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து ஆங்காங்கே அரசு அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தொகுதியின் மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்ஏ கே.தங்கவேல் சனியன்று காலை ஜம்மனை ஓடையில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார். 
குறிப்பாக தாராபுரம் சாலை சங்கிலிப் பள்ளம் பாலம், காங்கயம் சாலை சங்கிலிப்பள்ளம் பகுதி, காயிதே மில்லத் நகர், சத்யாநகர் விரிவு உள்ளிட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார். சத்யாநகர் விரிவுப் பகுதியில் கடந்தமுறை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மிகப்பெரும் சேதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு ஓடையின் குறுக்கே பாலம் உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியை பார்வையிட்ட எம்எல்ஏ கே.தங்கவேல் அப்பகுதி மக்களிடம் நிலைமையை கேட்டறிந்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் த.பாரிவேல் உள்பட மாவட்ட, வட்ட அதிகாரிகளும், மாநகராட்சி உதவி ஆணையர் கண்ணன் உள்ளிட்டோரும் இப்பகுதிகளில் நிலைமையை நேரில் கண்காணித்தனர்.
இப்பகுதி பெண்கள் கே.தங்கவேல் எம்.எல்.ஏ.விடம், ஓடையின் இருபுறமும் தடுப்புச் சுவர் கட்டிக் கொடுத்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டனர்.  
அதேபோல் தென்னம்பாளையம் முத்தையன் கோயில் அருகில் உள்ள பாலம், ஓடை பகுதியிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்பகுதிகளையும் கே.தங்கவேல் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
அவருடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.முத்துசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் டி.ஜெயபால், நகரக்குழு உறுப்பினர் பி.பாலன் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.
வெள்ள பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஓலி பெருக்கி வாகனம் மூலம் மாவட்ட நி்ரவாகத்தின் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு  செய்யப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் இரவு நேரங்களில் அருகாமையில் உள்ள திருமண மண்டபம், சமுதாயக் கூடம், கோயில் மண்டபங்களில் தங்க வைக்கவும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து இந்த ஓடைக்கு நீர் வரத்தை தொடர்ந்து கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு அதிகாரிகளிடம் கே.தங்கவேல் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.
--------------------




T Oct 25 Flood Thenampalayam, T Oct 25 Flood Thenampalayam1: திருப்பூர் தென்னம்பாளையம் முத்தையன் கோயில் - வெள்ளியங்காடு சாலை சந்திப்பு பகுதியில் ஜம்மனை ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம். இதனால் தென்னம்பாளையம் சாலையில் இருந்து வெள்ளியங்காடு பகுதிக்கு செல்லும் தரைமட்ட பாலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

0 comments: