Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
ஈரோடு நகரம் ஜவுளி மற்றும் மஞ்சளுக்கு பெயர் பெற்ற நகரம் ஆகும். மேலும் ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் என்ஜினீயரிங் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தனியார் பள்ளிக்கூடங்கள் என பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. எனவே ஈரோட்டுக்கு தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மஞ்சள் மற்றும் ஜவுளி வியாபாரிகள், மாணவ–மாணவிகள் வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ஈரோடு ரெயில் நிலையம் வந்துதான் மற்ற பகுதிகளுக்கு செல்கிறார்கள்.
அதுமட்டுமின்றி இந்த ரெயில் நிலையம் கேரள மாநிலம், கர்நாடக மாநிலம் மற்றும் தமிழ்நாட்டின் தென்னக மாவட்டங்களின் முக்கிய சந்திப்பாகவும் உள்ளது. எனவே ஈரோடு ரெயில் நிலையம் வழியாக தினமும் 120–க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் ஈரோடு வழியாக பயணிக்கிறார்கள்.
பயணிகளின் வசதிக்காக ஈரோடு ரெயில் நிலையத்தில் மொத்தம் 4 நடைமேடைகள் உள்ளன. இவ்வளவு வசதிகள் கொண்ட இந்த ரெயில் நிலையத்தில் 15–க்கும் மேற்பட்ட மனநோயாளிகள் சுற்றி வருகிறார்கள். இவர்கள் அந்தந்த நடைமேடைகளில் நின்று கொண்டு ரெயில் ஏறும் மற்றும் இறங்கும் பயணிகளிடம் பிச்சை எடுக்கிறார்கள்.
சில மனநோயாளிகள் குறிப்பாக பெண்களிடம் திடீரென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுவிட்டு ஓவென்று சிரித்துவிட்டு அங்கிருந்து ஓடுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களை பெண்கள் தங்களுடைய குடும்பத்தினரிடமோ மற்ற சக பயணிகளிடமோ சொல்லமுடியாமல் தவிக்கிறார்கள். சிலர் ரெயில் தண்டவாளத்தின் நடுவில் நின்று கொண்டு ரெயில் வரும்போது அதனுடன் மல்லு கட்டுவதுபோல் போஸ் கொடுக்கிறார்கள். அப்போது அவர்களின் உயிர்களை காப்பாற்ற சில பயணிகள் சத்தம் போட்டு அவர்களை விரட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதுகுறித்து ரெயில் நிலைய நடைமேடையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ் கூறியதாவது:–
மனநோயாளிகள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியாது. இது எங்களுக்கும் தெரியும். ஆனால் சில நேரங்களில் மன நோயாளிகள் ரெயில் ஏற வரும் பெண் பயணிகளை இடிப்பது போன்று வருவது, நெஞ்சு பகுதியில் கை வைப்பது போன்ற அருவருக்கத்தக்க, கூசத்தக்க செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
அப்போது பெண் பயணிகளோ அல்லது உறவினர்களோ இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் போலீசார் எங்களிடம் கூறுகிறார்கள். உடனே நாங்கள் நடைமேடைகளில் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருக்கும் மனநோயாளிகளை சத்தம் போட்டால் மற்ற பயணிகள் அவர்கள் மீது அனுதாபப்படுகிறார்கள். எங்கள் (போலீஸ்) மீது கோபப்படுகிறார்கள். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண் பயணிக்கு குறிப்பிட்ட மனநோயாளியை நாங்கள் ஏன் திட்டுகிறோம் என்பது தெரியும். ஆனால் மற்ற பயணிகளுக்கு இது புரிய வாய்ப்பில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன் 3–வது நடைமேடையில் ஒரு குடும்பத்தினர் தன்னுடைய 3 வயது குழந்தையுடன் வந்திருந்தனர். அப்போது அந்த குழந்தை அங்கு உட்கார்ந்து இருந்த மனநோயாளியிடம் சென்று விட்டது. என்ன காரணத்தினாலோ அவர் அந்த குழந்தையை திடீரென்று தனது காலால் ஓங்கி உதைத்து தள்ளிவிட்டு எதுவும் நடக்காது போல் உட்கார்ந்திருந்தார்.
ஓங்கி உதைத்ததில் அந்த குழந்தை நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் விழப்போனது.
இதனை கவனித்த அந்த குழந்தையின் தந்தை கீழே விழாமல் தடுத்து குழந்தையை பிடித்து விட்டார். உடனே அவர் இதுகுறித்து போலீஸ் நிலையத்துக்கு வந்து எங்களிடம் கூறினார்.
நாங்கள் அந்த மனநோயாளி இருந்த இடத்தை நோக்கி சென்றோம். ஆனால் எங்களை கண்டதும் நாங்கள் சத்தம் போட்டு திட்டுவதற்கு முன்பே அந்த மனநோயாளி ஓவென்று அழுது கொண்டே அங்கிருந்து ஓடிவிட்டார். இதுபோன்ற நடவடிக்கைகளால் மனநோயாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதா? அல்லது ரெயில் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதா? என்பதில் எங்களுக்கு சில சமயங்களில் சிரமம் ஏற்படுகிறது.
இவ்வாறு அந்த போலீஸ் கூறினார்.
எனவே ஈரோடு ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மனநோயாளிகளை மீட்டு காப்பகத்தில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

0 comments: