Friday, October 17, 2014

On Friday, October 17, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) கோரியுள்ளது.
இது தொடர்பாக உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் எம்.அசோகனுக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஈட்டி விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், அகவிலைப்படி உயர்வு ஊதியம் பல மாதங்களாக வழங்கப்படவில்லை. மேலும் கடந்த காலங்களில் தையல் கூலி ஆண் தொழிலாளர்களுக்கு தலா ரூ.400 வீதமும், பெண் தொழிலாளர்களுக்கு தலா ரூ.80 வீதமும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதைக் குறைத்து ஆண்களுக்கு ரூ.200, பெண்களுக்கு ரூ.40 என வழங்கியுள்ளனர்.
ஈட்டிய விடுப்பு ஊதியம், அகவிலைப்படி ஊதியம் இரண்டையும் கணக்கிட்டு வழங்குவதற்காக ஒவ்வொரு துப்புரவுத் தொழிலாளியிடமும் ரூ.500 முதல் ரூ.1000 வரை பெறப்பட்டுள்ளது மிகவும் முறையற்ற செயலாகும். இந்நிலையில் கடந்த ஏப்ரல் முதல் இந்த நிலுவைத் தொகை வழங்கப்படாமல் காலதாமதம் செய்யப்படுகிறது. 
எனவே துப்புரவு தொழிலாளர்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய இந்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும், இத்துடன் அகவிலைப்படி உயர்வுகளை முறையாக கணக்கிட்டு நிலுவைத் தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தையல் கூலியை இன்றைய நிலைமைக்கு ஏற்ப உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
----------------

0 comments: