Thursday, October 23, 2014

On Thursday, October 23, 2014 by Unknown in ,    
விருகம்பாக்கத்தில் அடகு கடை அதிபர் கொலை: 60 பவுன் நகைகள் கொள்ளை
சென்னை கே.கே.நகர் பங்காரு நாயுடு காலனியைச் சேர்ந்தவர் ஹிரா ராம் (54). அடகு கடை அதிபர். விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் ஹிரா ராம் அடகு கடை உள்ளது. செல்போன் ரீஜார்ஜும் செய்து வந்தார்.

நேற்று தீபாவளி தினம் என்றாலும் வழக்கம் போல் கடையை திறந்தார். நேற்று மாலை 5 மணியளவில் கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் ஒரு தங்க நகையை அடகு வைக்க வேண்டும் என்றனர். நகையை உரசிப் பார்த்து, எடை போட்டார். நகையை லாக்கரில் வைத்து விட்டு, பணத்தை எடுப்பதற்காக லாக்கர் அறைக்குள் சென்றார். 

அப்போது, அங்கு புகுந்த 2 பேர் ஹிரா ராமை திடீரென்று அரிவாளால் வெட்டினார்கள். அவர் மீது 4 வெட்டுகள் விழுந்தன. ரத்தம் பீறிட அவர் தரையில் சாய்த்தார். இதற்குள் அங்கு அடகு வைப்பது போல் நின்று கொண்டிருந்தவர்கள் அறைக்குள் புகுந்து லாக்கரில் இருந்த நகைகளை அள்ளிச் சென்றனர். 16 நகை பாக்ஸ்கள் காலியாக கிடந்தன. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் 60 முதல் 100 பவுன் இருக்கலாம் என்று தெரிகிறது. 

இரவு 8.30 மணியளவில் ஹிரா ராம் ரத்த வெள்ளத்தில் கடைக்குள் விழுந்து கிடப்பது அவரது மகன் ஆனந்த் மூலம் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. தென்சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் (பொறுப்பு) திருஞானம், தி.நகர் துணை கமிஷனர் பகலவன், அசோக் நகர் உதவி கமிஷனர் ஆறுமுகம், கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். கை ரேகை நிபுணர்கள் வந்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. 

நகை கடை அதிபர் ஹிரா ராம் வடபழனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.30 மணிக்கு பரிதாபமாக உயிர் இழந்தார். 2½ கிலோ நகை – பணம் தப்பின. லாக்கரில் இருந்த பணம் மற்றும் 105 பைகளிலும், தனியாகவும் இருந்த 2½ கிலோ அடகு நகைகள் தப்பின. 3 ரீஜார்ஜ் செல்போன்கள், 3 அடகு சீட்டுகள் ஆகியவை கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். 

அடகு கடைக்குள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பயன்படுத்தபப்டும் வெட்டரிவாள் கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி உள்ளனர். எனவே அந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த பகுதியில் தங்கி இருந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. 

எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள ஆற்காடு சாலையில் இருக்கும் இந்த அடகு கடையில், அதன் அதிபரை வெட்டி விட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நேற்று தீபாவளி தினம் என்பதால் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த நேரம் பார்த்து இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த பகுதியை நன்கு அறிந்தவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். 

செல்போன் ரீஜார்ஜ் செய்தவர்கள், ஹிரா ராம் போனில் பேசியவர்கள், நகை அடகு வைத்தவர்கள் பட்டியலை போலீசார் தயாரித்து வருகிறார்கள். கடையை நோட்டமிட்டு திட்டம் போட்டு கொள்ளையடித்தார்களா? அல்லது முன் விரோதத்தில் கொலை செய்து விட்டு அதை மறைப்பதற்காக நகைகளை அள்ளிச் சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொலை – கொள்ளை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலையுண்ட ஹிரா ராம் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி ரமாபாய் (50). இவர்களுக்கு காஞ்சனா, மஞ்சு என்ற மகள்களும், ஆனந்த் (22) என்ற மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. ஆனந்த் சி.ஏ. படித்து வருகிறார். நேற்று மாலை 5.30 மணிக்கு ஆனந்த் மோட்டார்சைக்கிளில் தங்கள் அடகு கடை முன்பாக சென்றுள்ளார். அப்போது தந்தை ஹிரா ராம் உள்ளே இல்லை. எனவே வெளியே சென்று இருப்பார் என்று நினைத்துக் கொண்டார். 

இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பிய ஆனந்த் அப்போதும் தந்தை வீட்டுக்கு வராததால் அடகு கடைக்கு சென்றுள்ளார். அங்கு ‘லாக்கர்’ அறையில் ஹிரா ராம் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அலறி துடித்தார். உடனே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஹிரா ராம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 5 மணிக்கே ஆனந்த் கடைக்குள் வந்து இருந்தால் கொள்ளையர்கள் சிக்கி இருக்கலாம். ஹிரா ராமும் உயிர் பிழைத்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

0 comments: