Monday, October 13, 2014

On Monday, October 13, 2014 by farook press in ,    
சென்னையில் கந்து வட்டி கும்பலை போலீசார் வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். நேற்று கணவன்-மனைவி இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நகரில் கந்து வட்டிக்கொடுமையில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்களை, சிறையில் தள்ளி போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கந்து வட்டி வசூலித்து கோடிகளை அள்ளி, கொடுமை புரிந்து வந்த 9 பேர் கடந்த 2 மாதங்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குண்டர் சட்டமும் இவர்கள் மீது பாய்கிறது.
இருந்தாலும் சென்னையில் கந்து வட்டிக்காரர்களின் அட்டூழியம் தொடர்கிறது. இதனால் கந்து வட்டி கொடுமை புரிபவர்களை தொடர்ந்து வேட்டையாடி பிடிக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோரின் மேற்பார்வையில் செயல்படும் தனிப்படை போலீசார், கந்து வட்டி வசூலித்த கணவன்-மனைவி இருவரை கைது செய்தனர்
நேற்று கைதான கல்யாணராமன், அவரது மனைவி தமிழ்செல்வி என்ற செல்வி ஆகியோர், சென்னை பள்ளிக்கரணை, துலுக்காணத்தம்மன் கோவில், பிரதான சாலையில் வசிக்கிறார்கள். கல்யாணராமன் எலக்ட்ரீசியன் வேலை பார்த்தவர். தமிழ்செல்வி, வீட்டிலேயே தையல் தொழில் செய்து வந்தார்.
நாளடைவில், இவர்கள் ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு சீட்டு நடத்தி அதன்மூலம் சம்பாதித்த பணத்தை கந்து வட்டிக்கு கடன் கொடுத்து வந்தனர். 10 சதவீதம் வட்டி வசூலித்து வந்துள்ளனர்.
பள்ளிக்கரணை தனம் நகரைச் சேர்ந்த கற்பகம் என்பவர், இவர்களிடம் தனது குடும்ப செலவுக்காக ரூ.2.95 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதற்கு ரூ.6.89 லட்சம் வட்டியாக திருப்பி கொடுத்துள்ளார். ஆனால், மேலும் ரூ.3.55 லட்சம் தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன கற்பகம், கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து விட்டார். புகார் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவின் கந்து வட்டி தனிப்படை போலீசார், வழக்குப்பதிவு செய்து, கல்யாணராமனையும், அவரது மனைவி தமிழ்செல்வியையும் கைது செய்து சிறையில் தள்ளி விட்டனர்.
கந்து வட்டி கொடுமையில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments: